18 செப்டம்பர் 2013

கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து சுயேட்சைக்குழு தேர்தலில் இருந்து விலகல்!

திரு.கி.சிவாஸ்கரனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழு இல.8, ஜம்புக்காய் சின்னத்தில் வடமாகாணசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது எமதுகுழு போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறுவது உறுதி என்பதை அரசாங்கம் உள்ளிட்ட சகலரும் உணர்ந்துள்ளமையை மக்கள் சந்திப்பினூடாகவும், ஊடக அறிக்கைகளின் மூலமும் அறிந்துகொண்டுள்ளோம். இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்விற்கும் இடையூறாக இல்லாமல் கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாம் தேர்தலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம்.
நடைபெறவுள்ள தேர்தல் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் முக்கியமான தேர்தலாகக் கணிக்கப்படுவதாலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் அவர்களது உரிமைகள் தொடர்பாகவும் இத்தேர்தலானது பல மாற்றங்களை உருவாக்கும் என்ற அடிப்படையிலும் மாகாணசபையை மிக அதிகப்படியான பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் நீண்ட நெடிய துயரமிக்க வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு தமது முழு உரிமைகளுடன் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றிற்கான இடத்தைக் கொடுக்கும் முகமாகவும் நாம் இத்தேர்தலிலிருந்து விலகுகின்றோம்.
இன்றுவரை எமக்கு ஆதரவாகப் பரப்புரைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது ஆதரவாளர்கள் அனைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டுமென்று வேண்டுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக