23 செப்டம்பர் 2013

முன்னர் எப்போதுமே காணா சரித்திர வெற்றி-இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வெற்றி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு, யாழ். ரில்கோ விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 80 வீதமான ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான ஆசனங்களை கூட்டமைப்பு தனதாக்கி உள்ளது என்றும் அவர் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வெற்றியானது 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வெற்றியிலும் பார்க்க மகத்தானது என்று அவர் மேலும் கூறினார். " வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வெற்றியும் சிறப்பானது தான். எனினும் அது தொகுதி வாரியான தேர்தலின் கீழ் கிடைத்த வெற்றி. மாகாண சபைத் தேர்தலில் இப்போது கிடைத்திருக்கும் வெற்றி, விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்கீழ் பெற்ற வெற்றி. இவ்வாறு விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் கீழ் கிடைத்த வெற்றி என்பது நிச்சயம் 1977 இல் பெற்றுக்கொண்ட வெற்றியை விடவும் மேலானது.'' மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகத் தெளிவாகவே உள்ளது. ஐக்கியமான பிளவு படாத நாட்டுக்குள் பாதுகாப்போடும் சுயமரியாதையோடும் கெளரவத்தோடும் போதிய சுயாட்சியைப் பெற்று தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக, கலாசார அபிலாஷைகளை அடையவே விரும்புகின்றனர். இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளை, அரசும் தனது பங்களிப்பை முழுமையாக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் சந்தித்த பலவிதமான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடமாகாண தமிழ் மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என அனைவரையும் வற்புறுத்தி கேட்கிறோம். எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரித்ததற்காக எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அவர்கள் தமது அபிலாஷைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்வோம்''என்றார் சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக