22 செப்டம்பர் 2013

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சீருடையினர்!

நெல்லியடி பிரதேச செயலகத்தை அண்மித்து அரச தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சீருடையினர் சுவரொட்டிகள் ஒட்டியபோது அதனைத் தட்டிக் கேட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கழுத்தில் பிடித்துத்தள்ளி சீருடையினர் அவரைத் தாக்க முயன்றதாகவும் தான் பொலிஸ் பொறுப்பதிகாரி என்று கூறியதை அடுத்து அவரைச் சீருடையினர் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆயினும் அங்கு நின்ற நான்குக்கும் மேற்பட்ட பொலிஸாரை கையில் அகப்பட்ட தடிகளாலும், கை கால்களாலும் தாக்கியுள்ளனர் சீருடையினர். நிலைமை மோசமடைந்ததனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து சீருடையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரே இந்தச் சம்பவம் இடம் பெற்றது. எனினும் இந்தச் சம்பவம் வெளியே தெரியாத வாறு மூடி மறைக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகவே சீருடையினர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தனர். இதன் போது அந்த வழியே ரோந்து சென்ற பொலிஸார் அதனைத் தட்டிக் கேட்டபோதே அவர்கள் மீது சீருடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்ற போது அவர் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோதே பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 150 இற்கும் மேற்பட்ட சீருடையினர் அங்கு நின்றிருந்துள்ளனர். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியிருந்தார். எனினும் இறுதியில் "அதுபற்றி தற்போது கூற முடியாது'' என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக