30 செப்டம்பர் 2013

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக மோதும் மகிந்த கூட்டணி!

வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று கோரி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன.எனினும், இதில், ஈபிடிபிக்கு, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வவுனியாவில் இரண்டு, யாழ்ப்பாணத்தில் ஒன்று என மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தலா 1 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிக ஆசனங்களை வென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தநிலையில், அங்கஜனை விட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற வகையில், தமது கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக