16 செப்டம்பர் 2013

வெளிநாட்டில் இருப்பவர்கள் மூன்றாம் நபர்களாம்!விக்னேஸ்வரனின் விளக்கம்

தமிழரும் சிங்களவரும் கணவன் - மனைவி போன்றவர்கள் என்று தான்,'த ஹிந்து' நாளிதழுக்குக் கூறவில்லை என்றும், தனது கருத்தை குறித்த நாளிதழ் திட்டமிட்டு திரிபுபடுத்தியுள்ளதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், 'தி ஹிந்து' நாளிதழுக்கு அளித்த செவ்வி தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
“ அண்மையில் 'த ஹிந்து' நாளிதழுக்கு செவ்வி வழங்கியிருந்தேன்.
அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.
'த ஹிந்து' நாளிதழ் செய்தியாளர் என்னிடம் 10 -12 கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அத்தனை கேள்விகளுக்கும் நாள் அளித்த பதில்களில் ஒன்றாவது வெளிவரவில்லை.
இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார்.
அந்த செவ்வியில் நான், தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்றும் கூறியிருந்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல்கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது நலனுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பாவிப்பது ரெனிஸ் பந்து அடிப்பது போல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் பிரிவினையை ஒரு தீர்வாக கூறுவது, ஒரு கணவன்- மனைவி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் மணநீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.
இதில் கணவன் - மனைவி என்று நான் தமிழரையும் சிங்களவரையும் குறிப்பிடவில்லை. மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
மூன்றாம் நபர் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன் - மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ, அதுபோலத் தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிந்தியாவில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று கூறினேன்.
தென்னிந்திய மக்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கு எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றனர்.
அவர்களது அனுசரணையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாணசபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது.
அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக 'த ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக