15 மார்ச் 2014

விபூசிகாவின் தாயார் பூசாவில்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.
காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக