17 மார்ச் 2014

கைதானவர்கள் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்!

கிளிநொச்சியில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.
"காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்தக் கைது நடவடிக்கையானது, இலங்கை அரசியலமைப்பில் பொதுமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றது என்று மனித உரிமைகளுக்கும் ஆய்வுக்குமான நிலையமும், நீதியும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பும் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
இந்த அமைப்புக்களின் பணிப்பாளராகிய கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வலிந்து வாக்குமூலங்களைப் பதவுசெய்யும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 48 மணித்தியாலங்கள் ஒருவரைத் தடுத்துவைக்கலாம் என்ற சட்டத்தின் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரைக் கைதுசெய்திருப்பதானது, இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டு நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்ற சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே வழிகோலியுள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக