26 மார்ச் 2014

சிறீலங்கா தூதரகத்தில் சுமந்திரனுக்கு அமோக வரவேற்பு!

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் கலந்து கொண்ட சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் சிறப்பு வரவேற்பை அளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக கருத்துக்களைச் சொல்ல வருபவர்களை சிறீலங்கா கடுமையாக அச்சுறுத்தியும் அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தியும் வரும் நிலையில், கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறும் சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் ஜெனீவாவில் வரவேற்பு அளித்துள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு சென்ற சுமந்திரனை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்காக சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மகிழ்ச்சி பொங்க வரவேற்பளித்ததாக தெரியவருகின்றது. தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த சுமந்திரன் ஜெனீவா சென்றுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துவரும் நிலையில், இவருக்கு சிறீலங்கா தரப்பு மகிழ்ச்சியான வரவேற்பளித்துள்ளமையானது பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியுடன் ஜெனீவாவிற்குப் பயணம் மேற்கொண்ட சுமந்திரன், சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டாம் என்றும் சிறீலங்கா உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தாங்கள் சந்தித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் சிறீலங்காவின் சார்பாக வலிந்துகேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுமந்திரன் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காத் தூதரகம் சென்றிருந்தவேளை அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் பிரசன்னமாகி இருந்ததாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக