21 மார்ச் 2014

சிறீலங்காவிற்கு எதிராக புதிய அறிக்கை வெளியாகியுள்ளது!

இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கொடூரமான துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக மற்றுமொரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. பிரித்தானிய மனித உரிமைகள் சபையின் சட்டத்தரணிகள் ஒன்றியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், 2009ம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் பல்வேறு விதமாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிய அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் சித்திரவதையை அனுபவித்துள்ளனர். குறிப்பாக பாலியல் துஸ்பிரயோகங்கள், பலவந்தமான வன்புணர்வுகள் மற்றும் சுய பாலியல் சார்ந்த செயற்பாடுகளில் பலவந்தமாக ஈடுபடுத்தல், சிகரட்டுகளாலும், எரியும் நெருப்பாலும் சூடுவைத்தல் போன்ற சித்திரவதைகளுக்கும் அவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து பிரித்தானிய மனித உரிமைகள் சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் தலைவர் யாசிம் சூக்கா, பாலியல் ரீதியான கொடுமைகளில் தாம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சாதாரண மாதிரிகளே என்றும், இதனைவிட கொடூரங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றுக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக