04 மார்ச் 2014

அமெரிக்காவின் தீர்மானம் போராட்டத்தை முடக்குவதற்கே–திருமுருகன் காந்தி

பீரிஸ்-பிஸ்வால் 
தமிழீழ விடுதலையை நீர்த்துப் போகச் செய்வதற்கும், புலிகளின் அரசியல் ஆதரவு ஈழவிடுதலை செயல்தளத்தினை முடக்குவதற்கும் மட்டுமே இந்த தீர்மானம் பயன்படப் போகிறது.
அமெரிக்கா ஏதோ யோக்கியமான தீர்மானம் கொண்டு வருகிறது, அதை இந்தியாதான் நீர்த்துப் போகச்செய்கிறது என்றெல்லாம் நம்பிக்கொண்டு பிரச்சாரம் செய்தவர்களை என்னவென்று சொல்வது?
கடந்த வருடம் கொண்டு வந்ததைப் போலவே இவ்வருடமும், இலங்கைக்கு தமிழினப்படுகொலையை நடத்தி முடிக்க மேலும் அவகாசத்தினை கொடுத்திருக்கிறார்கள்.
ராஜபக்சேவினை தண்டிப்பதற்கான அரசியல் வேறு, ஈழவிடுதலைக்கான அரசியல் வேறு. ராஜபக்சேவினை தண்டிப்பதன் மூலம் ஈழவிடுதலையை வென்றுவிடலாம் என்று பிரச்சாரம் வலுவாக நடக்கவே செய்கிறது. 2011இல் இதை எச்சரித்தோம். அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ராஜபக்சேவினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஆட்சி மாற்றம் செய்துவிட்டு வேரொருவரை கொண்டுவர இந்த மனித உரிமை மீறலை பயன்படுத்துகிறார்கள். இதை ராஜபக்சேவே கடந்த மாத பேட்டியில் கொடுத்திருக்கிறார்.
இதை 2011இல் ஐ.நாவின் நிபுணர் அறிக்கை வெளியிட்ட பொழுதே இதை எச்சரித்தோம். அப்பொழுதிருந்து இன்றுவரை எங்கள் மீது “சிங்களக் கைகூலிகள், இந்திய உளவாளிகள்” என்று பட்டம் கட்டுவதை மட்டுமே செய்தார்களே ஒழிய எங்களது கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை..
ஐ.நாவும், அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலந்தும் இணைந்து ”ஆட்சி மாற்றமே தமிழர்களுக்கு தீர்வு” என்கிற வேலையை செய்கின்றன. இதனாலேயே ராஜபக்சே இவர்களை எதிர்க்கிறார். தமிழர் விரோத அரசியலை செய்வதால் நாமும் எதிர்க்கிறோம்.
இவர்களின் சுருக்க அரசியல் :
இங்கிலாந்து -அமெரிக்காவின் விருப்பம் : ஆட்சி மாற்றம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் நல்லிணக்க அடிப்படையில் வாழ்வது, புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.
இந்தியா: ஆட்சி மாற்றம், 13 வது சட்ட திருத்ததின் அடிப்படையில் மாகாண உரிமைகள். தமிழ்தேசிய கூட்டமைப்பினைக் கொண்டு இலங்கையிடம் பேரம் பேசுதல். புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.
ஐ.நா: இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளை வலுபடுத்துவது, சீர்திருத்துவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இலங்கையர்களாக வாழ நல்லிணக்க-உண்மை அறியும் முறையை ஏற்படுத்துவது. இதற்கான இடைக்கால நீதி வழங்கு முறையை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கான காரணத்தினை ஏற்படுத்துவது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுமளவிற்கும், தமிழர்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கும், தமிழகத்தில் சூழலை உருவாக்க ’அமெரிக்க-ஐ.நா அதரவு’ கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கு என்.ஜி.ஓக்களை களம் இறக்குவது. இவர்களுக்கு துணையாக அரசியல் இயக்கங்களை மாற்றுவது.
மேல் சொன்ன அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. நெருக்கடிக்குள்ளாக்கும் எந்த ஒரு கேள்வியையும் இவர்களை நோக்கி எழுப்பாமல் தமிழ்ச் சமூகம் எப்பொழுதும் போல கடந்து போகுமோ என அச்சமே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக