06 மார்ச் 2014

சுமந்திரன் மீது அனந்தி குற்றச்சாட்டு!

தமிழ்  தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. என்னையும் எதுவும் பேச அனுமதிக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையினில் தமிழரசுக்கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் ஜெனீவா சென்றிருந்தேன்.
அங்கு சென்று இறங்கியதுமே தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப்புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
18 நாட்டு ராஜதந்திரிகள் சகிதம் கடந்த பெப்;ரவரி 13ல் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருந்த சுமந்திரன் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி மற்றொரு கேள்விக்கு அங்கு பதிலளித்தார்.
ஏதாவதொரு பிரேரணையினை கொண்டுவந்தால் போதுமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததெனவும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவினில் ஓர் போர்க்குற்ற விசாரணை வருமென நம்பிருந்த எமது மக்கள் விரக்திக்குள்ளாகி இருக்கிறார்கள். காணாமல் போனோர் தொடர்பில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது. எமது மக்கள் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்குமெனவும் அனந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக