22 மார்ச் 2014

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு எமக்கே என்கிறார் பிரித்தானிய பிரதமர்!

நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானத்திற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் ஆதரவைத் தாம் உறுதி செய்திருப்பதாகப் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்திருக்கும் டேவிட் கமரூன், கடந்த காலங்களில் நிகழ்ந்தேறிய சம்பவங்களுக்கு சரியான தீர்வை எட்டும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதே தனது ஆவா என்றும், எனினும் இதனை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளத் தவறியிருக்கும் நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு இப்பொழுது தேவைப்படுவது பன்னாட்டு சுயாதீன விசாரணை என்றும் தெரிவித்துள்ளார். இதுவிடயத்தில் தான் ஆழமான கரிசனையைக் கொண்டிருப்பதோடு, இதற்கென அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்திற்கு இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான ஆதரவைத் தான் உறுதி செய்திருப்பதாகவும் பிரித்தானியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக