18 மார்ச் 2014

தமிழ் பெண் சிப்பாய்கள் கருக்கலைப்புக்கு உட்பட்டுள்ளனர்!

நீண்டகால கருத்தடை முறைமையினை தமது பெண் சிப்பாய்களிற்கு செய்யுமாறு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விடுக்கப்பட்ட பணிப்புரையினை, கடுமையான உத்தரவினை அடுத்து கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலை அதிகாரிகள் அதனை அமுல்படுத்தியதாக வடக்கு மருத்துவ வட்டாரச் செய்திகள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தன.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களை வைத்தியர்கள் சோதணைக்குள்ளாக்கிய போது இருவரும் கருவுற்றிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. திருமணமாகாத நிலையில் இவர்கள் கருவுற்றிருக்கின்றமை, குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் இராணுவத்தில் இணைந்து பணியாற்றும் போது கருவுற்றமை தொடர்பில் வைத்திய பொறுப்பதிகாரிகளது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அவ்வேளையில் குறித்த இலங்கை இராணுவத்தினை சேர்ந்த தமிழ் யுவதிகள் இருவரும் தமக்கு முகாமில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் சித்திரவதைகளை வெளிப்படுத்தியதுடன் தமது கருக்களை கலைத்துவிடவும் கோரியுள்ளனர். எனினும் இதற்கு மருத்துவர்கள் மறுதலித்துள்ளதுடன் பெற்றோரிற்கு அறிவிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் வன்னி படைத் தலைமை யகத்திலிருந்து வைத்திய சாலை உயர்மட்டத்திற்கு சென்ற தொலைபேசி அழைப்பினையடுத்து அவர்களிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் நீண்டகால கருத்தடை கருவிகளும் பொருத்தப்பட்டதாக தெரியவருகின்றது.ஏற்கனவே இவ்வாறு இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளிற்காக குரல் கொடுத்த மருத்துவர் ஒருவர் கைதாகி சிறையில் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் தற்போது வேலையினையும் இழந்து வீட்டில் வசித்து வருகின்றார். அத்தகைய வாழ்க்கை தமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இராணுவ பணிப்பில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடைகளை வைத்தியர்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

நன்றி:குளோபல் தமிழ் செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக