04 மார்ச் 2014

சமந்தா பவர் நேற்று ஜெனிவா வரவில்லை!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரின் உரை இடம்பெறவில்லை.
நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முதல்நாள் அமர்வில், உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரைகள் வரிசையில், அமெரிக்கா சார்பில் ஐ.நாவுக்கான தூதுவர் சமந்தா பவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சமந்தா பவர் விபரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்றைய அமர்வில் சமந்தா பவரின் உரை இடம்பெறவில்லை.
உக்ரேன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து ஆராய, நியுயோர்க்கில் நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றதால், சமந்தா பவர் ஜெனிவா செல்லவில்லை.
இதற்கிடையே, அமெரிக்கா சார்பில், சமந்தா பவருக்குப் பதிலாக, இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச் செயலர் சாரா சீவோல் உரையாற்றுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலராக உள்ள சாரா சீவோல், இன்று பிற்பகல் உரையாற்றுவார் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இன்றைய நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக