31 மே 2013

யாழில் சிங்களவர்களை குடியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமய அடம்!

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த வடக்கைச் சேர்ந்த சிங்களவர்கள், மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாத நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே அக்கட்சியின் செயலாளர் ஸ்ரீ நிஷாந்த வர்ணசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘அன்று வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்த நிலங்களில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அக்காணிகளுக்கான உறுதிகளும் அவர்களது பெயர்களுக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டார்.
அத்துடன், ‘இதற்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போதும் அங்கு வாழ்ந்த சுமார் 150 சிங்கள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது, அச்சிங்கள குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்க அதிபரும் எம்மிடம் உறுதியளித்தனர்.
ஆனால், அவர்களின் அந்த உறுதிமொழி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல வடக்கின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியேறிய சிங்களவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும்’ என்று அவர் மேலும் கூறினார்.

28 மே 2013

பிக்குவின் இறுதிச்சடங்கை இன்றே நடத்த ஏற்பாடு!

கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்கை இன்றே நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடைசெய்யக் கோரி தீக்குளித்த வண.போவத்தை இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கை காரணமாக வைத்து, கடும் போக்குவாத பௌத்த பிக்குகளும், பேரினவாதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் நாளை இரத்தினபுரி கஹவத்தையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பெளத்த பிக்குவின் இறுதிச்சடங்கை அவசர அவசரமாக இன்றே நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு மூலம் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரத்தினபுரி காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுக்கமைய இன்று பிற்பகல் 4 மணியளவில் பிக்குவின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது.
இந்த இறுதிச்சடங்குகளின் போது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பிலும் இரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இறைச்சிக்கடைகள் மூடுமாறு பெளத்த பிக்குகளும், சிங்கள அடிப்படைவாதக் குழுக்களும் மிரட்டல்களை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலநாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் கூட்டுசதி-ஆரியசிங்க

ஆரியசிங்க 
இலங்கைக்கு எதிராக சில நாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து கூட்டு சதி செய்கின்றனர் என்றும் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விரிவாக ஆராய வேண்டும் என்றும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
புலம்பெயர் மக்களின் சிலர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்றும் குற்றம் சாட்டினார். கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை மிகமோசமாக பாதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் அரசியல்மாமாக்கலின் விளைவாக புலம் பெயர் மக்களின் கட்டாயப்படுத்தலில் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடுகளின்றி நம்பகத்தன்மையற்ற முறையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை முற்றுமுழுதாக அவசியமற்ற ஒன்றாகும். அதனால்தான் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்தது
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.
12ஆயிரம் முன்னாள் போராளிகளில் இம் மாதம் 15 ஆம் திகதி வரை 11,551 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 374 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. 194 பேர் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 7896 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரமாக காணப்பட்ட இராணுவ படையினர் தற்போது 13200 ஆக குறைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்றும் ஆரியசிங்க தெரிவித்தார்.

25 மே 2013

பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து இருபடையினரின் உடலங்கள் மீட்பு!

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம் என்பதை எவரும் உறுதிசெய்யவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 54 ஆவது பிரிகேட் படையணியினை சேர்ந்த படையினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த பாலத்திற்குள் துவிச்சக்கர வண்டி கிடப்பதை கண்டு மக்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரு படையினரின் உடலங்களையும் மீட்டுள்ளார்கள்.
குறித்த படையினரின் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட படை அதிகாரி உதயபெரேரா மாங்குளம் காவல்துறை அதிகாரி அமரசிங்க உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இரு படையினரின் உடலங்களும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் தென்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத திருமணம் இலங்கையர் கைது!

சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார். அவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்பிரஸ் நாட்டின் காவற்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைப்பிரஸில் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக, அந்த நாட்டு குடியுரிமை கொண்டவர்களை சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்யும் வழக்கம் தொடர்ந்தும் நிலவுகிறது.
இந்த அடிப்படையில் பங்களாதேஸை சேர்ந்த ஒருவர், சைப்பிரஸ் குடியுரிமை கொண்ட தமது காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முற்படும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மே 2013

தமிழர்களை வெளியேற்றிவிட்டு சிங்களவர்களை குடியேற்ற முயற்சி!

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக செயற்படும் மன்னார் பிரதேச செயலாளர் டி.தயானந்தா இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களிடம் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான கடிதம் உரிய தரப்பினருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறி தொடர்ந்தும் காணிகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 600 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர் போன்ற கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே எமிழ் நகர் பகுதியில் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தம்மை வெளியேற்றி அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

23 மே 2013

20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சர்வதேச மன்னிப்புச்சபை

கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
20 பலவந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீதித்துறைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் துன்புறுத்தி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த போதிலும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

22 மே 2013

பொதுநலவாய நாடுகள் தலைர்கள் அமர்வை இலங்கையில் நடத்தக் கூடாது!

மங்கள சமரவீர 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாத என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளைப் பேணி பாதுகாப்பது தொடர்பில் மிக முக்கியமான பொறுப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 முக்கிய பிரகடனங்களையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகவும், அந்தக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் ஒடுக்கப்படும் நிலைமை இலங்கையில் நீடித்து வருவதாகவும் மங்கள
குறிப்பிட்டுள்ளார்.

21 மே 2013

கருணாவை கொண்டுவந்தது ரணில்-பிரபா ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

டக்ளஸ்-கருணா 
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைப் பிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித் பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகள் மீது கொண்டிருந்த தப்பான அபிப்பிரயாத்தின் பெறுபேறாகவே கிழக்கில் பொலிஸ் அதிகாரிகள் கொன்றொழித்தமையை பார்க்க வேண்டும். அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த காலத்திலேயே கிழக்கில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதனை ஜனாதிபதி பிரேமதாஸ எதிர்த்தார். அதனால் தான் இராணுவத்துடன் சண்டையிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இரகசியமாக ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை வழங்கினார் என்று மேஜர் ஜெனரல் டென்சில் கொம்பேகடுவ கொலையை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்க முடிந்தது. அது மிகமிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் தலைவருக்கு எதிராக செயற்படவும் மாத்தையா குழுவை பலப்படுத்துவதற்குமே ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

20 மே 2013

செந்தமிழன் சீமான் மீது வழக்கு... கைது செய்ய போலீஸ் தீவிரம்!

கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக் கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால் இந்த கருத்தரங்கத்தை தொடர்ந்து இரவு பொதுக் கூட்டமும் இதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து இரவு 10.20 மணி வரை நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்நிலையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தடையை மீறி சீமான், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கடல்தீபன், ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகியோர் கடலூர் டி.வி.எம். மகாலில் நாம் தமிழர் கட்சியினரை ஒன்று கூட்டி கலைநிகழ்ச்சி, நாடகம், கருத்தரங்கம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியும், 30/2 போலீஸ் சட்டம் நிலுவையில் உள்ள போது இரவு 10 மணிக்கு மேல் 10.20 மணி வரை தொடர்ந்து பொது ஜன அமைதிக்கு குந்தகம், பங்கம் விளைவித்தார்கள் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சீமான், கடல்தீபன், சவுண்ட் சர்வீஸ் ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது திருப்பாதிரி புலியூர் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சீமான் உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அத்திபாரம் தமிழரசுக்கட்சி என்கிறார் சேனாதிராஜா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திபாரமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி ஒன்றிணைத்து தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.
யாழ். வளைவு திறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின்மாநாடு மல்லாகத்தில் நடைபெற்றபோது, தமிழரசுக் கட்சி கூட்டணியில் பிரதான பங்கேற்று செயற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று இப்போது கூட்டமைப்பிலும் அத்திபாரமாக உள்ள தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளுக்கு சமநிலை வழங்கி அவற்றை அரவணைத்துச் சென்று தமிழர் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
தமிழரசுக் கட்சி எப்போதும் கூட்டமைப்பிலேயே இருக்கும். 1970 இல் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாகராசா என்பவர் யாழ். நகர முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட யாழ். வளைவு மீண்டும் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லூர் பிரதேசசபை மூலம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

19 மே 2013

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அணி திரட்டும் டக்ளஸ் தேவானந்தா

மகிந்த பசிலுடன் டக்ளஸ் 
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இக்குழுவின் ஒன்றிணைப்பானது எதிர்வரும் வடமாகாண தேர்தலில் மக்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாக கூட இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

18 மே 2013

புலிகளைக் குற்றம் சாட்டியவர்கள் செய்தது என்ன?புலிகளின் அறிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது?, என கேள்வி எழுப்பியுள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பு. மே 18 ம் தேதியை இன அழிப்பு நாளாக அறிவித்துள்ள விடுதலைப் புலிகள்,
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது. எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது. மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும். இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது. போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

எங்கும் சிங்களப் படை - சூறையாடல்
எங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது. படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன. எமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது. தனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவி விடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது.

சிங்கள இனவாத திருகுதாளங்கள்
உலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா.

இணையமுடியா இரு தேசங்கள்
ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது. சிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன. ஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது. கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது.

புலிகளைக் குற்றம் சாட்டியவர்கள் செய்தது என்ன?
தமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது? நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள். உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும்.

மீண்டும் போராட்டம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை. இனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை. அன்பான தமிழ்பேசும் மக்களே, விடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது. உலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை புலிகளின் தலைமைச் செயலகத்தின் சார்பில் ராமு சுபன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக சூழலில் படைக்குவிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை பெருமளவான படை குவிப்பு காரணமாக பல்கலைக்கழக சூழலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

16 மே 2013

சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு!

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4 ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு நேற்றுக்காலை இவருக்கு அழைப்புக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும், குரல் கொடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் சிலர் 4 ஆம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் ஆகியோர் கடந்த வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் முன்னர் அழைப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக ஜனநாயக வழியில் குரல்கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதானது எதிர்காலத்தில் தமிழ் மக்களை மௌனிகளாக மாற்றும் ஓர் செயற்பாடாகும் என அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

14 மே 2013

தமிழ் தேசியம் இல்லாவிடில் கூட்டும் இல்லை!

கருத்தியல் ரீதியாக உடன்பாடு எட்டப்பட்டால் அன்றி தமிழ்க் கட்சிகள்அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் முயற்சிவெற்றியளிக்காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு தீர்வாகவோ அல்லது அதிலிருந்து படிப்படியாக தீர்வு நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற வாதத்தையோ நாம் ஏற்கப்போவதில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசிய பேரவை அமைக்க முயற்சித்தால் நாம் அதில் பங்கெடுக்க மாட்டோம்'' என்றார் அவர்.
அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கடந்த சனிக்கிழமை மன்னார் ஆயர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், சிவில் சமூகத்துக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தற்போது இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையிலும், தமிழ் மக்களின் ஆகக் குறைந்த அரசியல் தீர்வுக்கு தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை எட்டும் வகையிலும் தமிழ்த் தேசியப் பேரவை அமைக்கப்பட்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
இதில் இறுதி அரசியல் தீர்வு என்ன என்ற விடயத்திலும், அதனை அடைவதற்கான பாதை எதுவென்பதிலும் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபை ஊடாக படிப்படியாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.
எங்களைப் பொறுத்த வரையில் மாகாண சபை முறைமையில் தீர்வை சிங்கள தேசமே தீர்மானிக்கும். தமிழ்த் தேசத்தின் இறைமை, சுயநிர்ணயம், தனித்துவமும் அங்கீகரிக்கப்படுகின்ற வேளை சிங்கள தேசத்தின் இறைமை, சுயநிர்ணயம், தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு இரு தேசங்களின் கூட்டாக தீர்வு அமைய வேண்டும் என்பதே எமது கருத்து.
இதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எமது கட்சி தமிழ்த் தேசிய பேரவைக்குச் செல்லாது என்றார்.

13 மே 2013

இனத்துவேசி ஜாபிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றும் ஜாபீர் என்பவருக்கு எதிராக இன்றும் அவ்வைத்தியசாலை தாதிய
உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் மக்கள் நூறுவீதம் வாழும் இப்பகுதியில் அவ்வைத்தியசாலையை சீரழிக்கும் வகையில் செயற்படும் வைத்திய அத்தியட்சகர் ஜாபீரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பிரதேச மக்களும் அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.
இவ்வைத்திய அத்தியட்சகர் அங்கு பணியாற்றும் ஊழியர்களை பழிவாங்கி வருவதாகவும், தமிழ் பிரதேசத்தில் இருக்கும் வைத்தியசாலை என்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழில் தேவாலயம் மீது மின்னல் தாக்கியது!

யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இன்று காலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இடிந்து சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை முதல் இடிமின்னலும் மழை தொடர்கின்றது. இதனால் பல்வேறு இடங்களில் காற்று பலமாக வீசியதனால் மரங்கள் முறிந்து வீதிகளில் காணப்படுவதுடன் பொது மக்களுடைய வீடுகளது தகரங்களும் காற்றினால் அள்ளுண்டு போயுள்ளன.
இதேவேளை, காலை 6.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை இந்த ஆலயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளயது.
இதில் ஆலய முகப்பில் இருந்த கார்மேல் மாதாவின் முகம் மின்னல் காரணமாக சிதைவடைந்துள்ளதுள்ளதுடன் ஆலயமும் இடிந்துள்ளது.
எனினும் ஆலயப் பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ். வல்வெட்டித்துறையில் இன்று அதிகாலை இடி வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். வல்வெட்டித்துறை கடலில் மீன்பிடிப்பதற்குச் சென்ற மீனவர்கள் இருவர் மீதே இடி வீழ்ந்துள்ளதாக வல்வெட்டித்துறை ஆதி கோவில் மீனவர் சங்கத் தலைவர் எம்.மதியழகன் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருள்ராஜ் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அதே இடத்தைச் சேர்ந்த வல்லிபுரம் சிவபாலன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

12 மே 2013

த.தே.மக்கள் முன்னணியும் த.தே.கூட்டமைப்பும் இணக்கத்திற்கு வரவில்லை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியல் தீர்வு தொடர்பில் குறைந்தபட்ச  இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம்பெற்றது.
காலை 11.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைரீதியான இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலையில் கூட்டம் முடிவுற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் 13 ம் திருத்தத்தினை நிராகரிக்க முடியாது என்றும், கெழும்பிலுள்ள முக்கிய சில இராயதந்திரிகள் வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டிக்காட்ட வேண்டுமென தம்மிடம் கூறியுள்ளதாகவும் எனவே தாம் அதில் கட்டாயம் போட்டியிடுவோம் என்றும் உறுதிபடக் கூறினர்.
அத்துடன் படிப்படியாக அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வை பெறும் முயற்சியை தாம் முன்னெடுப்போம் என்றும் எனவே அதிகாரப்பகிர்வுப் பாதையை நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில், இறைமையுடைய தமிழ்த் தேசமும், இறைமையுடைய சிங்கள தேசமும் இணைந்து தேசங்களின் கூட்டாக ஒரு இறுதித்தீர்வு எட்டப்பட்ட வேண்டும் எனவும் இத்தீர்வை அடைவதற்கான அரசியல் பாதையானது 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளை நிராகரிப்பதாகவும், அதிகாரப் பகிர்வுப் பாதையை நிராகரிப்பதாகவும் அமைய வேண்டுமெனவும் தமது கருத்துக்களை தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினர் முன்வைத்தனர்.
தீர்வைப் பெறுவதற்கான இவ்விரு அணுகுமுறைகளும் தமிழ்த் தேசத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலிப்பதாக இருக்கும் எனவே தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்று கூறிக்கொண்டு அவ்வாறான தீர்வுப் பாதையில் ஒருபோது செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாதிட்டனர்.
இவ்விரு தரப்பும் தத்தம் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்றமையினால் கொள்கை விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாடொன்றை எட்ட முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் மிகமிகக் காரசாரமான விவாதம் 6.00 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
எனினும் கொள்கைவிடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக கொள்கை விடயங்களை தீர்மானிப்பதற்கும், கொள்கையை அடைந்து கொள்வதற்கான அரசியற் பாதை என்ன என்பதனை தீர்மானிப்பதற்குமான நான்குபேர் கொண்ட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளுமான புவிதரன், குருபரன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய அவை (Tamil National Council) ஒன்றினை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களை இணைத்து உருவாக்குவது பற்றியும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறான கவுண்சில் அமைப்பதற்கு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஆரம்பத்தில் இணங்க மறுத்தாலும் அங்கிருந்தவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கொள்கையளவில் இணங்கினர்.
இக்கவுண்சில் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது நிலைப்பாடு கவுண்சிலானது தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தைக் கோரும் நோக்கில் அமையுமாயின் தமது ஆதரவு உண்டென்று கூறியிருந்தனர்.
அடுத்து தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் பற்றியும், அதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.
அதன்போது இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை நாம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறப்பட்டபோது இன அழிப்பு என்று குறிப்பிடுதவற்கு ஆரம்பத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இணங்கவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகத்தினர் ஆகியோர் உறுதியாக இருந்தமையினால் இறுதியில் இன அழிப்பு என்று குறிப்பிட்டு பொது அறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு அவ்விருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராஜப்பு ஜோசப் அவர்களது தலைமையிலான தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதயம் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன், சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், விநோனோகராதலிங்கம், சிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

11 மே 2013

யாழ்,சுதுமலையில் மதுபோதையில் மோதல்!

யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இத்தகராற்றின் போது, படுகாயம் அடைந்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்களை உயிரோடு வந்து சந்திப்பேன்னு நினைக்கலை!

 Dr Ramadoss Released From Trichy Prison
டாக்டர் ராமதாஸ் 
சிறையில் அடைக்கப்பட்ட தாம் உயிரோடு திரும்பி வந்து உங்களையெல்லாம் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி போராட்டம் நடத்தினார் டாக்டர் ராமதாஸ். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ராமதாஸ் மீது மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாக பேசியது, மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரை ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல், கூடங்குளத்தில் தடையை மீறியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது என அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று கூடங்குளம் வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் பெற்ற ராமதாஸ் 12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று காலை திருச்சி சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சிறைக்குள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அறிவிக்கப்படாத, அறிவிக்க முடியாத ஒரு அவசரகால நிலை பாமக மீதும், வன்னிய சமுதாய மக்கள் மீதும் இந்த அரசு அறிவிக்காமல் அறிவித்திருக்கிறது. பாமகவினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த 12 நாட்களாக நான் சிறையில் இருந்தேன். உங்களை எல்லாம் மீண்டும் உயிரோடு வந்து சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார் என்றார்.

10 மே 2013

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழினி விடுதலை!– தயா மாஸ்டர்

தமிழினி 
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை செய்யப்படுவார் என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கு அரசின் முக்கிய முதன்மை வேட்பாளராக நான் களம் இறங்குகின்றேன். எனது அரசியல் பயணத்தை விரும்பாத சில தென்பகுதி அரசியல்வாதிகளின் நோக்கத்தை நான் நன்கு அறிவேன் வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சரப் பணிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்த பிரபலயங்கள் களத்தில் இறக்கப்படவுள்ளனர்.
இதில் முதன்மைப் பேச்சாளர் பட்டியலில் தமிழினி இடம்பிடித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக களம் இறக்கப்பபடலாம் என நினைக்கின்றேன்.
உண்மையில் வடமாகாண சபைத் தேர்தல் களம் பாரிய நெருக்கடிகளைக் கொண்டதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த தேர்த்தல் களத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என்றார்.

இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை!

இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 29 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடுப்பின் மேல் பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி மருத்துவமனையில் கேட்டதற்கு எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதேபோன்று இந்த வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்பெண்ணின் உடலை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உறவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிகிச்சை மூலம் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் தமிழர்களின் உடல் உறுப்புகளை ஆபரேசன் மூலம் அகற்றி கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கொத்து குண்டுகளை வீசியும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம், தற்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் தமிழர்களை கொலை செய்து வருகிறது என்கின்றனர் அங்கு உயிர் பயத்தில் வாழும் தமிழர்கள்.

09 மே 2013

பாலூட்டும் தாய்மார்களும் மின்னேரியா படை முகாமுக்கு அழைப்பு!

பா.அரியநேந்திரன் 
பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பாலூட்டும் தாய்மார்களை கூட மின்னேரியா இராணுவ முகாமில் நடக்கவிருக்கும் பயிற்சி நிகழ்வுக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பொருளாதார அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவரையும் மின்னேரியா இராணுவ முகாமிற்கு வருமாறு அரசாங்கம் அழைத்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அது குறித்து மேலும் கூறுகையில்
மின்னேரியாவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமுக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக கூறி தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார்,மனைவிமார் என அனைவரையும் அரசாங்கம் அழைத்துச் சென்றுள்ளதாக பலர் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர் கைக்குழந்தைகளை உடைய தாய்மார்கள் என்பதுடன் பலர் நோயாளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் இந்த இராணுவ பயிற்சிக்குறிய உடல்,உளத் தகுதிகளை கொண்டிருக்கவில்லை இவர்களுடைய குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதாக பெற்றோர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க உத்தியோகத்தர் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட இவர்களை மின்னேரியா இராணுவ முகாமில் வைத்து பயிற்சியளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை இவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டுமானால் ஒரு பொது இடத்திலோ அல்லது குறிப்பிட்ட பிரதேச செயலகத்திலோ பயிற்றுவிப்பாளர்களை கொண்டு பயிற்சியளிக்க முடியும்.ஆனால் மின்னேரியா இராணுவ பயிற்சி முகாமில் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலங்களில் பல்கலைகழக மாணவர்களையும் அரசாங்கம் தலமைத்துவ பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்தியிருந்தது அப்போது பல பெண் மாணவர்கள் கை,கால் முறிந்து நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் அரசாங்கம் வயது வேறுபாடின்றி இவ்வாறான இராணுவ பயிற்சிகளை வழங்குவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
குறிப்பாக பல பெண்களை மின்னேரியா இராணுவ முகாமிற்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக கூறுவதை எமது தமிழ் சமூகமோ,அல்லது பெற்றோர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இப் பயிற்சிக்கு செல்லாவிட்டால் தங்களுக்கு வேலை கொடுக்கமாட்டார்களாம் என்ற பயத்தின் காரணமாகவே கைக்குழந்தைகளையும் தங்களது குடும்பத்தையும் விட்டு விட்டு 18 நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்காக இவர்கள் சென்றுள்ளார்கள்.
எனவே தொடர்ச்சியாக மின்னேரியா இராணுவ முகாமில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளதால் இந்த பயிற்சிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதுடன் கடுமையான பயிற்சிகளை வழங்குவதையும் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என அரியநேந்திரன் கூறினார்.

08 மே 2013

தமிழகத்தில் பான் பராக்,குட்காவுக்கு தடை!

 Jaya Bans Pan Parack Gutka Sales Tn முதல்வர் ஜெயலலிதா இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது. இதன் மூலம் சாந்தி உள்ளி்ட்ட பெயர்களில் பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அசாத் சாலி கைது தொடர்பில் கோத்தாவின் ஆணவப்பேச்சு!

இனவாதி கோத்தபாய 
நாட்டில் கடும்போக்கைத் தூண்டுவோர் மீது அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மட்டுமன்றி கடும்போக்குவாதத்தை தூண்டும் ஏனைய நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளாறாக இந்த போராட்டத்தைக் கருதினார்.
எனினும், இறுதியில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தையும் கொலை செய்தார். அதுபோல தமிழகத்திற்கு சென்று அசாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாக இருந்தாலும் நாட்டில் பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றும் வரையில் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.
அசாத் சாலியினால் பிரபாகரனை உருவாக்க முடியாது. பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.
தற்போது அசாத் சாலி கைது செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என தமிழின அழிப்பின் முக்கிய சூத்திரதாரியான கோத்தபாய தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

07 மே 2013

முல்லைத்தீவில் படைச் சிப்பாய் தற்கொலை!

தமிழர்களின் தாயகப் பிரதேசமாகிய முல்லைத்தீவை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைச் சிப்பாய் ஒருவன் நேற்று திங்கட்கிழமை தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
முல்லைத்தீவு மாஞ்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள காவலரணில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாயே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்தவராவார்.
இந்த இராணுவச் சிப்பாயும் இன்னொரு சிப்பாயும் தினமும் காவல் கடமையில் ஈடுபடும் இடத்தில் குறித்த சிப்பாய் நேற்று பகல் 11 மணியளவில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தான் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தனது தாடைப் பகுதியில் சுட்டுத் தற்கொலை செய்ததாக இவருடன் சேர்ந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றைய படைச்சிப்பாய் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவருடன் நின்ற மற்றைய சிப்பாயுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இவர் தற்கொலை செய்துகொண்டாரா? ஆல்லது மற்றைய படைச் சிப்பாய்தான் இவரைச் சுட்டுக் கொன்றாரா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

06 மே 2013

டக்ளசை விமர்சித்த சகாதேவன் மீது தாக்குதல்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர்.
பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார்.
தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மண்வெட்டி பிடிகளால் தாக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகிய இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கமானது வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிபதி புரிந்த அநீதி!

இலங்கை மேன்முறையீட்டு நீதவான் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்ணீர் போத்தலினால் சக நீதவான்களை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் மாநாடு ஒன்றுக்காக இந்தியா சென்று நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட நீதவானின் இந்த நடவடிக்கையினால் விமான நிலையத்தில் குழுமியிருந்த ஏனைய பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையைச் சேர்ந்த சக நீதவான்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பத்து நிமிடங்களுக்கு மேல் கடும் சொற்களினால் குறித்த நீதவான் திட்டித் தீர்த்ததாக பெங்களுர் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் உச்ச கட்டமாக கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலினால் நீதவான் ஒருவரைத் தாக்கியுள்ளார்.

05 மே 2013

மகிந்தவை இந்தியா பாதுகாத்தது எப்படி?உபுல் ஜோசப் பெர்ணான்டோ

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பற்றிய சிறப்பு அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், தனது சோதிடர்கள் அதற்கான நல்ல நேரத்தை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான தயா மாஸ்டரை யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார்.
பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் போராளியான அவர் நிறுத்தப்படலாம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டம் கணிசமானளவு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தது என்பதை சொல்லிக் கொள்ளத் தேவையில்லை.
அதேவேளை, “ நிச்சயமாக வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கான வேட்பாளர்களை நாம் தெரிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்று அமைச்சர் பசில் ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
உடனடியாகவே, கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா, கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு சிறிலங்காவில் திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதிப்படுத்தினார்.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த பின்னணியிலேயே ராஜபக்ச சகோதரர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்த இரண்டு முன்னேற்றங்களுக்கும் இடையில், சந்தேகத்துக்கு இடமற்ற இணைப்பு ஒன்று இருந்தது.
அந்த வேலையில் இந்தியாவின் கை இருந்தது. வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் அதனை வெளிப்படுத்தின.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் வரும் செப்ரெம்பரில் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டால், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா பாதிப்பின்றி வெளியே வரும் என்று இந்தியா உறுதி அளித்தது.
இந்த விடயத்தில் கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவரான பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சரின் ஒத்துழைப்புடன், இந்தியாவின் செயற்திறன் பெரிதாகவே இருந்தது.
கனடாவும், ஏனைய உறுப்பு நாடுகள் சிலவும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், செயலர் கமலேஸ் சர்மா மற்றும் கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவரான பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் மூலம் திசைதிருப்பி, அந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை இந்தியா ஏற்படுத்தியது.
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டுக்கு முன்னதாக, வரும் செப்ரெம்பரில் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.
வாக்குறுதி அளித்தபடி செப்ரெம்பரில் தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் மீது செல்வாக்குச் செலுத்தி, அதனை வாக்குறுதிப்படி நடந்து கொள்ள வைப்பதற்கு இந்தியா போதிய காலஅவகாசத்தைப் பெற்றுள்ளது.
அதிலிருந்து விலகும் எந்த முயற்சியும் செப்ரெம்பரில் நடக்கவுள்ள அடுத்த கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொமன்வெல்த்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஏனைய சந்தர்ப்பங்களிலும் கூட, கமலேஷ் சர்மாவை இந்தியா புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளின் முடிவில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் நிறைவு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதில் அவர் வகித்த பங்கிற்காக சர்மா தான் ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.
சர்மா ஒரு சிறந்த இந்திய இராஜதந்திரி. முன்னர் பிரித்தானியாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவர். காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்.
கொமன்வெல்த் செயலகத்தில் சர்மாவையும், ஐ.நாவில் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் கே நம்பியாரையும் தனது நலன்களுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது என்பது நன்கு தெரிந்த இரகசியமே.
போரின்
இறுதிக்கட்டத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தனது தூதுவராக விஜய் நம்பியாரை சிறிலங்காவுக்கு அனுப்பினார்.
அவரது எதிர்ப்பாளர்களும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களின் இழப்புகள் அதிகரிப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்த வேளை, அவர் எதுவும் செய்யாமல் கொழும்பில் தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிறிலங்கா அரசாங்கப் படைகளிடம் சரணடையும்படி ஐ.நா அறிவுறுத்தல் வழங்கியது.
நம்பியார் தம்மைப் புறக்கணித்து விட்டதாகவும், இந்தியாவின் தூண்டுதலால் மெனமாக இருந்து சிறிலங்காவுக்கு உதவினார் என்றும் புலம்பெயர் விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டினர்.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு ஐ,நா தலையீட்டையும் தடுப்பதற்காக நம்பியாரை இந்தியா பயன்படுத்தியது என்பதே அவர்களின் கருத்து.
கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு சிறிலங்காவில் திட்டமிட்டபடி நடக்கும் என்று அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இழுத்தடித்து வந்த, இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கான தனது அனுமதியை வழங்கினார்.
இறுதியில் இந்தியாவின் மகத்தான உதவியுடன், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வெளிநாட்டுப் பரிசை சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளது.

04 மே 2013

த.தே.மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் இல்லை!

வட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் தமிழ் தேசிய மக்கள்
முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
கொள்கைரீதியான உடன்பாடு ஏற்பட்டால் கட்சியை கலைத்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
விடயம் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த போலியான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் கொள்கை ரீதியான உடன்பாடு இல்லாமல் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியும்?
யுத்தத்திற்குப் பின்னால் இனத்தின் உணர்வுகளை, உரிமைகளை மதிக்காத அல்லது புறந்தள்ளும் வகையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையே, நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியமைக்கு காரணம்.
ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்தை பிடித்துக் கொண்டு நாங்களும் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இன்று எதுவுமேயில்லாத மாகாணசபை முறைமையினை ஏற்று தமிழர்களை சிறீலங்காவின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தள்ளும் மிகமோசமான வரலாற்றுத் தவறுக்கு நாங்களும் உடந்தையாக மாறியிருப்போம்.
நாம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தோம். மக்கள் எங்களை நிராகரித்தார்கள். அதற்காக நாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை. இந்த மக்களோடு இருக்கிறோம். இந்த மக்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
2010ம் ஆண்டு இருந்த நிலை இன்று இல்லை. மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் எங்களை ஏற்றுக் கொள்கின்றது. தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றில் நாமும் தவிர்க்க முடியாத பாகமாக மாறியிருக்கின்றோம்.
எனவே மக்களுடைய விருப்பம் ஒற்றுமை என்றால் மக்களுக்காக கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் நாங்கள் இணைந்து செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கி ன்றோம். ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை கலைத்துவிட்டு நாம் யாருடனும் ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் இணைய தயாரில்லை.
இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எங்களுடைய தீர்மானங்களுக்காக மக்கள் பெருமிதப்படுவார்கள். அதற்காக அரசியலை மக்கள் மயப்படுத்தும் எங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை உலகத்தின் ஜனநாயக நாகரீகங்களுக்குட்பட்டு தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
பல அச்சுறுத்தல்களும், எங்களை பின்னடைவு காணச்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றார்.

03 மே 2013

சரப்ஜித் சிங் உடலில் முக்கிய உறுப்புகள் மாயம்!

பாகிஸ்தானில் சக கைதிகளால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த சரப்ஜித் சிங் உடலில் பல உறுப்புகள் இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மையை இந்திய மருத்துவக்குழு தலைவர் குர்ஜித்மான் கூறியுள்ளார். லாகூர் மருத்துவமனையில்  நள்ளிரவு 1 மணிக்கு மரணமடைந்த சரப்ஜித்சிங் உடல் நேற்றிரவு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அமிர்தசரஸ் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவை மருத்துவர் குர்ஜித்மான் வெளியிட்டார். அப்போது அவர் கொல்லப்பட்ட சரப்ஜித் உடலில் இதயம், சிறுநீரகம், வயிற்று உள்உறுப்புகள் அகற்றப்பட்டு இருந்ததாக கூறினார். கபால எலும்பு முறிவு சரப்ஜித் தலையில் தாக்கப்பட்டதால் கபால எலும்பு முறிந்துள்ளது மருத்துவ குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரின் தாடை எலும்பும், இடுப்பு எலும்புகளும் முறிக்கப்பட்டுள்ளதாகவும், காதுகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். பொய் அம்பலம் இதனையடுத்து சிறையில் நடந்த கைகலப்பில் சரப்ஜித் காயம் என்ற பாகிஸ்தானின் பேச்சு பொய் என்பது உறுதியாகியுள்ளது. சரப்ஜித்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. லாகூர் சிறையில் சரப்ஜித்தை பலர் சேர்ந்து தாக்கியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகள் எனக் கூறி கப்பம் பெற்ற இருவர் கைதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, பரந்தன் சந்திப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசாரணையின்
பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ் கைது- புழல் சிறையில் அடைப்பு!

 Anbumani Ramadoss Also Arrested சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மரக்காணம் கலவரம், வன்முறையை தூண்டும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் பல இடங்களிலும் பாமகவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
வன்முறை பேச்சுக்கு கைது:
இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டைச் சுற்றிலும் இன்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் அன்புமணி ராமதாஸை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.. 2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
ஒரு தொகுதி கூட கிடைக்காது- அன்புமணி சாபம்!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழ்நாட்டில் நடந்த கலவரத்துக்கு பா.ம.க. தொண்டர்கள் காரணம் இல்லை. தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். திமுக தலைவர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தது ஜெயலலிதா அரசு. அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றார். திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்.
பின்னர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு அன்புமணி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லையில் வியனரசு கைது:
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வியனரசு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் எனினும், பழைய வழக்குகளை தூசி தட்டி வியனரசுவை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி கைதினைக் கண்டித்து பாமக தொண்டர்கள் 4 பேர் மொட்டை போட்டுள்ளனர்.

சர்வதேச நீதிமன்றம் செல்வதற்கும் தயார் - மாவை

எங்கள் மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டும் இதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை செல்வோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற காணி சுவீகரிப்பைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு பிரதேச சபைக்கும் தமது பிரதேசத்திலுள்ள மக்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். காணி சுவீகரிப்புக்கு எதிரான வாழ்வுரிமைக்கான எமது போராட்டம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் போராட்டங்களை மேற்கொள்வதற்கு பிரதேச ரீதியாக கட்சிக்கு அப்பால் சிவில் சமூகக் குழுக்களையும் உள்வாங்க வேண்டும். இதன் மூலம் நாங்கள் தொடர் போராட்டமாக மாவட்ட செயலகத்தை முடக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்
என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தை விட இப்போதுதான் நாங்கள் அதிக அழுத்தத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது ஐந்து பேரை யாவது திரட்டிப் போராட வேண்டும். எங்கள் இனம் திட்ட மிட்ட முறையில் அழிக்கப் படுகின்றது என்றார்.

02 மே 2013

கூட்டமைப்பை உடைக்க அரசு சதி!

பல கட்சிகளைப் பிரித்த இந்த அரசு, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கச் சதி செய்கின்றது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

பா.அரியநேந்திரன்:
"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்காகச் சில சக்திகள் கட்சியினுள்ளும் ஊடுருவியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றது. பல கட்சிகளை உடைத்த இந்த அரசு எங்களையும் பிரிக்க முயல்கிறது.
நாங்கள் தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் மாத்திரமே விடுதலையைப் பெற முடியும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரன்.

சி.சிறீதரன்:
"தமிழினத்தின் தாங்கு சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் பல வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே ஒரு அரங்கம் உருவாக்கினார்கள்.
இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விரும்பினால் இணைந்து வரலாம் என்று. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை அழிப்பதற்கான முயற்சி இதுவென்பதை அவர்கள் இனித்தான் உணர்வார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிதறடிக்கப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறடிக்கப்படப் போகின்றது'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

சீ.யோகேஸ்வரன்:
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்த தாவது:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் எங்கள் தலைமை எல்லோரையும் அரவணைத்துச் செயற்படுகின்றது.
ஒரு காலத்தில் எங்கள் இனத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசின் தொங்கு பாலமாகச் செயற்பட்டவர்கள் எல்லோரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏன் நாங்கள் அவ்வாறு செய்தோம்? எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகவே. ஆனால் எங்களுக்குள் வந்த பின்னர் எங்களுக்கே சதி செய்தால் விடமாட்டோம்.

மாவை சேனாதிராசா:
"எங்களுக்கு கட்சியில் பதவி ஆசையில்லை. ஆனால் பதவி சரியானவர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

01 மே 2013

சரப்ஜித் சிங் மூளைச்சாவு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 1990ம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் இறந்தனர். இதற்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டி இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் (49) கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் கடந்த வெள்ளிக்கிழமை சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜின்னா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். சரப்ஜித்தை பார்க்க மனைவி சுக்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப், பூனம், சகோதரி தல்பீர் கவுர் ஆகியோர் லாகூர் சென்றுள்ளனர். இதற்கிடையே, சரப்ஜித் மூளைச்சாவு அடைந்து விட்டதாக பாகிஸ்தான் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சரப்ஜித் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்.

காணிகளை ஒப்படைக்கக் கோரி மக்கள் வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம் தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டனர்.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலினை அடுத்து நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களிலும் பதிவு நடவடிக்கை இடம்பெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.
நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமல்ல வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.