01 மே 2013

காணிகளை ஒப்படைக்கக் கோரி மக்கள் வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம் தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டனர்.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலினை அடுத்து நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களிலும் பதிவு நடவடிக்கை இடம்பெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.
நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமல்ல வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக