02 மே 2013

கூட்டமைப்பை உடைக்க அரசு சதி!

பல கட்சிகளைப் பிரித்த இந்த அரசு, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கச் சதி செய்கின்றது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

பா.அரியநேந்திரன்:
"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்காகச் சில சக்திகள் கட்சியினுள்ளும் ஊடுருவியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றது. பல கட்சிகளை உடைத்த இந்த அரசு எங்களையும் பிரிக்க முயல்கிறது.
நாங்கள் தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் மாத்திரமே விடுதலையைப் பெற முடியும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரன்.

சி.சிறீதரன்:
"தமிழினத்தின் தாங்கு சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் பல வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே ஒரு அரங்கம் உருவாக்கினார்கள்.
இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விரும்பினால் இணைந்து வரலாம் என்று. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை அழிப்பதற்கான முயற்சி இதுவென்பதை அவர்கள் இனித்தான் உணர்வார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிதறடிக்கப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறடிக்கப்படப் போகின்றது'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

சீ.யோகேஸ்வரன்:
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்த தாவது:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் எங்கள் தலைமை எல்லோரையும் அரவணைத்துச் செயற்படுகின்றது.
ஒரு காலத்தில் எங்கள் இனத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசின் தொங்கு பாலமாகச் செயற்பட்டவர்கள் எல்லோரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏன் நாங்கள் அவ்வாறு செய்தோம்? எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகவே. ஆனால் எங்களுக்குள் வந்த பின்னர் எங்களுக்கே சதி செய்தால் விடமாட்டோம்.

மாவை சேனாதிராசா:
"எங்களுக்கு கட்சியில் பதவி ஆசையில்லை. ஆனால் பதவி சரியானவர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக