16 மே 2013

சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு!

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4 ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு நேற்றுக்காலை இவருக்கு அழைப்புக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும், குரல் கொடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் சிலர் 4 ஆம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் ஆகியோர் கடந்த வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் முன்னர் அழைப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக ஜனநாயக வழியில் குரல்கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதானது எதிர்காலத்தில் தமிழ் மக்களை மௌனிகளாக மாற்றும் ஓர் செயற்பாடாகும் என அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக