12 மே 2013

த.தே.மக்கள் முன்னணியும் த.தே.கூட்டமைப்பும் இணக்கத்திற்கு வரவில்லை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியல் தீர்வு தொடர்பில் குறைந்தபட்ச  இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம்பெற்றது.
காலை 11.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைரீதியான இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலையில் கூட்டம் முடிவுற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் 13 ம் திருத்தத்தினை நிராகரிக்க முடியாது என்றும், கெழும்பிலுள்ள முக்கிய சில இராயதந்திரிகள் வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டிக்காட்ட வேண்டுமென தம்மிடம் கூறியுள்ளதாகவும் எனவே தாம் அதில் கட்டாயம் போட்டியிடுவோம் என்றும் உறுதிபடக் கூறினர்.
அத்துடன் படிப்படியாக அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வை பெறும் முயற்சியை தாம் முன்னெடுப்போம் என்றும் எனவே அதிகாரப்பகிர்வுப் பாதையை நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில், இறைமையுடைய தமிழ்த் தேசமும், இறைமையுடைய சிங்கள தேசமும் இணைந்து தேசங்களின் கூட்டாக ஒரு இறுதித்தீர்வு எட்டப்பட்ட வேண்டும் எனவும் இத்தீர்வை அடைவதற்கான அரசியல் பாதையானது 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளை நிராகரிப்பதாகவும், அதிகாரப் பகிர்வுப் பாதையை நிராகரிப்பதாகவும் அமைய வேண்டுமெனவும் தமது கருத்துக்களை தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினர் முன்வைத்தனர்.
தீர்வைப் பெறுவதற்கான இவ்விரு அணுகுமுறைகளும் தமிழ்த் தேசத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலிப்பதாக இருக்கும் எனவே தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்று கூறிக்கொண்டு அவ்வாறான தீர்வுப் பாதையில் ஒருபோது செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாதிட்டனர்.
இவ்விரு தரப்பும் தத்தம் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்றமையினால் கொள்கை விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாடொன்றை எட்ட முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் மிகமிகக் காரசாரமான விவாதம் 6.00 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
எனினும் கொள்கைவிடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக கொள்கை விடயங்களை தீர்மானிப்பதற்கும், கொள்கையை அடைந்து கொள்வதற்கான அரசியற் பாதை என்ன என்பதனை தீர்மானிப்பதற்குமான நான்குபேர் கொண்ட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளுமான புவிதரன், குருபரன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய அவை (Tamil National Council) ஒன்றினை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களை இணைத்து உருவாக்குவது பற்றியும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறான கவுண்சில் அமைப்பதற்கு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஆரம்பத்தில் இணங்க மறுத்தாலும் அங்கிருந்தவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கொள்கையளவில் இணங்கினர்.
இக்கவுண்சில் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது நிலைப்பாடு கவுண்சிலானது தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தைக் கோரும் நோக்கில் அமையுமாயின் தமது ஆதரவு உண்டென்று கூறியிருந்தனர்.
அடுத்து தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் பற்றியும், அதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.
அதன்போது இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை நாம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறப்பட்டபோது இன அழிப்பு என்று குறிப்பிடுதவற்கு ஆரம்பத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இணங்கவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகத்தினர் ஆகியோர் உறுதியாக இருந்தமையினால் இறுதியில் இன அழிப்பு என்று குறிப்பிட்டு பொது அறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு அவ்விருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராஜப்பு ஜோசப் அவர்களது தலைமையிலான தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதயம் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன், சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், விநோனோகராதலிங்கம், சிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக