14 மே 2013

தமிழ் தேசியம் இல்லாவிடில் கூட்டும் இல்லை!

கருத்தியல் ரீதியாக உடன்பாடு எட்டப்பட்டால் அன்றி தமிழ்க் கட்சிகள்அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் முயற்சிவெற்றியளிக்காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு தீர்வாகவோ அல்லது அதிலிருந்து படிப்படியாக தீர்வு நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற வாதத்தையோ நாம் ஏற்கப்போவதில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசிய பேரவை அமைக்க முயற்சித்தால் நாம் அதில் பங்கெடுக்க மாட்டோம்'' என்றார் அவர்.
அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கடந்த சனிக்கிழமை மன்னார் ஆயர் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், சிவில் சமூகத்துக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தற்போது இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையிலும், தமிழ் மக்களின் ஆகக் குறைந்த அரசியல் தீர்வுக்கு தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை எட்டும் வகையிலும் தமிழ்த் தேசியப் பேரவை அமைக்கப்பட்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
இதில் இறுதி அரசியல் தீர்வு என்ன என்ற விடயத்திலும், அதனை அடைவதற்கான பாதை எதுவென்பதிலும் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபை ஊடாக படிப்படியாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.
எங்களைப் பொறுத்த வரையில் மாகாண சபை முறைமையில் தீர்வை சிங்கள தேசமே தீர்மானிக்கும். தமிழ்த் தேசத்தின் இறைமை, சுயநிர்ணயம், தனித்துவமும் அங்கீகரிக்கப்படுகின்ற வேளை சிங்கள தேசத்தின் இறைமை, சுயநிர்ணயம், தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு இரு தேசங்களின் கூட்டாக தீர்வு அமைய வேண்டும் என்பதே எமது கருத்து.
இதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எமது கட்சி தமிழ்த் தேசிய பேரவைக்குச் செல்லாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக