05 மே 2013

மகிந்தவை இந்தியா பாதுகாத்தது எப்படி?உபுல் ஜோசப் பெர்ணான்டோ

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பற்றிய சிறப்பு அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், தனது சோதிடர்கள் அதற்கான நல்ல நேரத்தை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான தயா மாஸ்டரை யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார்.
பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் போராளியான அவர் நிறுத்தப்படலாம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டம் கணிசமானளவு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தது என்பதை சொல்லிக் கொள்ளத் தேவையில்லை.
அதேவேளை, “ நிச்சயமாக வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கான வேட்பாளர்களை நாம் தெரிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்று அமைச்சர் பசில் ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
உடனடியாகவே, கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா, கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு சிறிலங்காவில் திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதிப்படுத்தினார்.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த பின்னணியிலேயே ராஜபக்ச சகோதரர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்த இரண்டு முன்னேற்றங்களுக்கும் இடையில், சந்தேகத்துக்கு இடமற்ற இணைப்பு ஒன்று இருந்தது.
அந்த வேலையில் இந்தியாவின் கை இருந்தது. வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் அதனை வெளிப்படுத்தின.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் வரும் செப்ரெம்பரில் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டால், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா பாதிப்பின்றி வெளியே வரும் என்று இந்தியா உறுதி அளித்தது.
இந்த விடயத்தில் கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவரான பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சரின் ஒத்துழைப்புடன், இந்தியாவின் செயற்திறன் பெரிதாகவே இருந்தது.
கனடாவும், ஏனைய உறுப்பு நாடுகள் சிலவும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், செயலர் கமலேஸ் சர்மா மற்றும் கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவரான பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் மூலம் திசைதிருப்பி, அந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை இந்தியா ஏற்படுத்தியது.
அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டுக்கு முன்னதாக, வரும் செப்ரெம்பரில் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.
வாக்குறுதி அளித்தபடி செப்ரெம்பரில் தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் மீது செல்வாக்குச் செலுத்தி, அதனை வாக்குறுதிப்படி நடந்து கொள்ள வைப்பதற்கு இந்தியா போதிய காலஅவகாசத்தைப் பெற்றுள்ளது.
அதிலிருந்து விலகும் எந்த முயற்சியும் செப்ரெம்பரில் நடக்கவுள்ள அடுத்த கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொமன்வெல்த்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஏனைய சந்தர்ப்பங்களிலும் கூட, கமலேஷ் சர்மாவை இந்தியா புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளின் முடிவில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் நிறைவு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதில் அவர் வகித்த பங்கிற்காக சர்மா தான் ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.
சர்மா ஒரு சிறந்த இந்திய இராஜதந்திரி. முன்னர் பிரித்தானியாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவர். காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்.
கொமன்வெல்த் செயலகத்தில் சர்மாவையும், ஐ.நாவில் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் கே நம்பியாரையும் தனது நலன்களுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது என்பது நன்கு தெரிந்த இரகசியமே.
போரின்
இறுதிக்கட்டத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தனது தூதுவராக விஜய் நம்பியாரை சிறிலங்காவுக்கு அனுப்பினார்.
அவரது எதிர்ப்பாளர்களும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களின் இழப்புகள் அதிகரிப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்த வேளை, அவர் எதுவும் செய்யாமல் கொழும்பில் தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிறிலங்கா அரசாங்கப் படைகளிடம் சரணடையும்படி ஐ.நா அறிவுறுத்தல் வழங்கியது.
நம்பியார் தம்மைப் புறக்கணித்து விட்டதாகவும், இந்தியாவின் தூண்டுதலால் மெனமாக இருந்து சிறிலங்காவுக்கு உதவினார் என்றும் புலம்பெயர் விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டினர்.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு ஐ,நா தலையீட்டையும் தடுப்பதற்காக நம்பியாரை இந்தியா பயன்படுத்தியது என்பதே அவர்களின் கருத்து.
கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு சிறிலங்காவில் திட்டமிட்டபடி நடக்கும் என்று அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இழுத்தடித்து வந்த, இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கான தனது அனுமதியை வழங்கினார்.
இறுதியில் இந்தியாவின் மகத்தான உதவியுடன், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வெளிநாட்டுப் பரிசை சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக