|
டாக்டர் ராமதாஸ் |
சிறையில் அடைக்கப்பட்ட தாம் உயிரோடு திரும்பி வந்து உங்களையெல்லாம் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி போராட்டம் நடத்தினார் டாக்டர் ராமதாஸ். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ராமதாஸ் மீது மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாக பேசியது, மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரை ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல், கூடங்குளத்தில் தடையை மீறியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது என அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று கூடங்குளம் வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் பெற்ற ராமதாஸ் 12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று காலை திருச்சி சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சிறைக்குள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அறிவிக்கப்படாத, அறிவிக்க முடியாத ஒரு அவசரகால நிலை பாமக மீதும், வன்னிய சமுதாய மக்கள் மீதும் இந்த அரசு அறிவிக்காமல் அறிவித்திருக்கிறது. பாமகவினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த 12 நாட்களாக நான் சிறையில் இருந்தேன். உங்களை எல்லாம் மீண்டும் உயிரோடு வந்து சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக