19 மே 2013

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அணி திரட்டும் டக்ளஸ் தேவானந்தா

மகிந்த பசிலுடன் டக்ளஸ் 
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இக்குழுவின் ஒன்றிணைப்பானது எதிர்வரும் வடமாகாண தேர்தலில் மக்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாக கூட இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக