28 மே 2013

சிலநாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் கூட்டுசதி-ஆரியசிங்க

ஆரியசிங்க 
இலங்கைக்கு எதிராக சில நாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து கூட்டு சதி செய்கின்றனர் என்றும் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விரிவாக ஆராய வேண்டும் என்றும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
புலம்பெயர் மக்களின் சிலர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்றும் குற்றம் சாட்டினார். கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை மிகமோசமாக பாதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் அரசியல்மாமாக்கலின் விளைவாக புலம் பெயர் மக்களின் கட்டாயப்படுத்தலில் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடுகளின்றி நம்பகத்தன்மையற்ற முறையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை முற்றுமுழுதாக அவசியமற்ற ஒன்றாகும். அதனால்தான் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்தது
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.
12ஆயிரம் முன்னாள் போராளிகளில் இம் மாதம் 15 ஆம் திகதி வரை 11,551 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 374 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. 194 பேர் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 7896 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரமாக காணப்பட்ட இராணுவ படையினர் தற்போது 13200 ஆக குறைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்றும் ஆரியசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக