21 மே 2013

கருணாவை கொண்டுவந்தது ரணில்-பிரபா ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

டக்ளஸ்-கருணா 
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைப் பிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித் பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகள் மீது கொண்டிருந்த தப்பான அபிப்பிரயாத்தின் பெறுபேறாகவே கிழக்கில் பொலிஸ் அதிகாரிகள் கொன்றொழித்தமையை பார்க்க வேண்டும். அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த காலத்திலேயே கிழக்கில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதனை ஜனாதிபதி பிரேமதாஸ எதிர்த்தார். அதனால் தான் இராணுவத்துடன் சண்டையிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இரகசியமாக ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை வழங்கினார் என்று மேஜர் ஜெனரல் டென்சில் கொம்பேகடுவ கொலையை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்க முடிந்தது. அது மிகமிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் தலைவருக்கு எதிராக செயற்படவும் மாத்தையா குழுவை பலப்படுத்துவதற்குமே ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக