03 மே 2013

அன்புமணி ராமதாஸ் கைது- புழல் சிறையில் அடைப்பு!

 Anbumani Ramadoss Also Arrested சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மரக்காணம் கலவரம், வன்முறையை தூண்டும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் பல இடங்களிலும் பாமகவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
வன்முறை பேச்சுக்கு கைது:
இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டைச் சுற்றிலும் இன்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் அன்புமணி ராமதாஸை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.. 2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
ஒரு தொகுதி கூட கிடைக்காது- அன்புமணி சாபம்!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழ்நாட்டில் நடந்த கலவரத்துக்கு பா.ம.க. தொண்டர்கள் காரணம் இல்லை. தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். திமுக தலைவர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தது ஜெயலலிதா அரசு. அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றார். திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்.
பின்னர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு அன்புமணி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லையில் வியனரசு கைது:
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வியனரசு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் எனினும், பழைய வழக்குகளை தூசி தட்டி வியனரசுவை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி கைதினைக் கண்டித்து பாமக தொண்டர்கள் 4 பேர் மொட்டை போட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக