24 ஜூலை 2014

மகிந்தவின் வருகை இடைநிறுத்தம் தமிழ் மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!

ஒண்றிணைந்த தமிழ்மக்களின் உணர்வுக்கொந்தளிப்பில் சிக்கிட அஞ்சிய சிங்கள இனவெறியன் மகிந்தவின் ஸகொட்லாந்து வருகை நிறுத்தம்.
கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை மகிந்த ஏற்க மறுத்துள்ளார்
பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் மாபெரும் கொட்டொலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொது நலவாய விளையாட்டு ஆரம்ப விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வருகை தர இருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கவனஈர்ப்புப் போராட்டத்திலேயே பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் நேற்று யூலை 23ஆம் நாள் கலந்து கொண்டார்கள்.
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பேருந்துகளில் ஸ்கொட்லாந்து நோக்கிப் படையெடுத்திருந்தார்கள்.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச பயங்கரவாதத் தமிழின அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், தமிழ் இனத்தையே கருவோடு அழித்தொழிக்கும் நடவடிக்கையை திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாத அரச கட்டமைப்பானது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதையும், உலகநீதிமன்றில் வெளிக்கொண்டு வந்து தங்கள் இலக்கை வெல்லும் வரை சளைக்காமல் செல்வோம் என்னும் உறுதியோடு தொடரும் மக்கள் போராட்டத்தின் தொடராக நேற்றைய போராட்டமும் முன்னெடுக்கப் பட்டிருந்தது.நேற்று யூலை 23 காலையிலிருந்து பெருமளவில் மக்கள் ஒன்றுசேரத்தொடங்கிய மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடன் ஓங்கிக்குரல் எழுப்பத்தொடங்கினர்.
மாலை மணி 4.30 க்கு தமிழீழத்தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழீழத்தேசியக்கொடியை ஏற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழவின் பொறுப்பாளர் ராஜமனோகரன் அவர்களால் மண் மீட்புப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும், கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனையடுத்து 1948ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிங்கள பௌத்த இனவாத அரசின் கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்த 6 பிரதமர்களினதும் 5 அரசுத்தலைவர்களினதும் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் விதத்தில் 11 சுடர்கள் ஏற்றப்பட்டன.
இந்தநேரத்தில் அங்கு நிறைந்திருந்த மக்கள் மிகுந்த உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருந்தார்கள் என்பதை ஒவ்வொருவர் முகங்களும் எடுத்துக்காட்டின
மக்களின் கொட்டொலி முழக்கங்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தன
எனினும் நேற்றைய விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைக்க ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வர இருந்த, பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பைத் தற்போது வகிக்கும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவின் வருகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டப் பேரலையே அவருடைய பயண நிறுத்தத்திற்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் சில கருத்து வெளியிட்டுள்ளன. இந்த சேதி போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்மக்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத கறுப்புநாள். இனவாத சிங்கள அரசால் தமிழர் கொன்றழிக்கப்பட்ட யூலை 23ஐ தமிழ்மக்கள் கறுப்புநாளாக நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கறுப்புயூலையின் 31ஆம் ஆண்டினை நினைவுகூரும் இந்த நெருப்பு நாளில் தமிழினத்தை கருவறுக்கும் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்ஸ வருகை தருவதா என்ற கொதிப்புடன் பெருந்தொகையான மக்கள் இந்த கொட்டொலிப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்டு கொட்டொலிகளை எழுப்பிய மக்களின் குரல்களில் அவர்களின் ஆத்திரமும், ஆவேசமும் பலமாக வெளிப்பட்டது.
இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஸவின் இந்த பின்வாங்கல் மேலும் மேலும் தமிழ்மக்களுக்கு உறுதியையும்,உத்வேகத்தையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பொதுநலவாயநாடுகளின் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும், பார்வையாளர்களுமென அலைஅலையாக சென்று கொண்டிருந்த உலகநாடுகளின் மக்களின் கவனத்தையும், சர்வதேசஊடகங்களின் கவனத்தையும், தமிழ்மக்களின் இந்த உணர்வுமயமான போராட்டம் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக