04 ஜூலை 2014

புலிகள் அமைப்பில் கணக்காளராக இருந்தவரும் தமிழகம் வந்தாராம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கணக்காளர்களில் ஒருவரை இந்தியப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு கைதானவர் அண்மையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலமாக அகதிகளாக தனுஸ்கோடியைச் சென்றடைந்த நால்வரில் ஒருவரே என்றும் கூறப்படுகின்றது. கடலின் கரைப்பகுதியில் மார்பளவு நீருக்குள் இறக்கி விடப்பட்ட இவர்களை தமிழகப் கரையோரக் காவல் படையினர் காப்பாற்றி தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதே நால்வரில் ஒருவரான எஸ். சதீஸ் (வயது 39) என்பவர் தமிழீழழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவில் கணக்காளராக இருந்தவர் என்றும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஒரு பட்டதாரி எனவும், கடந்த 2004 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கணக்காளராக இவர் இருந்தார் என்றும் தெரிகிறது. இதேபோன்று கைதான பெண்ணான சாந்தி (வயது 39) என்பவர் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தில் பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது. கைதானவர்களில் எஸ்.ரவீந்திரன் (வயது 38), மலர் (வயது 55) ஆகியோரும் அடங்குவர். இதேவேளை சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா சென்றடைந்த நால்வரும் தலா 10 ஆயிரம் ரூபாவை படகுக்காரர்களுக்கு வழங்கினர் எனவும் அவர்கள் அதிகாலை 1.30 மணியளவில் இந்தியக்கரையில் நால்வரையும் இறக்கி விட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக