17 ஜூலை 2014

சின்னமடுப்பகுதியில் கைக்குழந்தையுடன் சென்ற தாயை உதைத்து தள்ளிய காட்டுமிராண்டிகள்!

ஊர்காவற்றுறை பகுதியில் கைக்குழந்தையுடன் வீதியால் சென்ற வாய்பேசமுடியாத பெண் உந்துருளியில் சென்றவர்களினால் காலால் உதைத்து வீழ்த்தப்பட்டார்.
இதில் அவரும் அவரது குழந்தையும் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் இடம்பெற்றது.
இது குறித்துத் தெரியவருவதாவது:- சம்பவ தினம் வீதியால் கைக்குழந்தையுடன் நடந்து வந்த வாய்பேசமுடியாத பெண்ணை மதுபோதையில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்து வந்த ஊர்காவற்றுறையில் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியராகப் பணியாற்றும் ஒருவர் காலால் உதைத்து வீழ்த்தியுள்ளார்.
இவர் கடமை நேரத்தில் இருக்கும் போது இந்தச் செயலைப் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொலைவில் இருந்து அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்றபோதும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பொலிசார் காயமடைந்த பெண்ணையும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் சுதர்சினி (வயது 36) என்ற பெண்ணே காயமடைந்தவராவார்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடிவரும் தேடிவரும் சமயத்தில் ஊர்காவற்றுறை காவல் நிலையத்துக்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யாமல் சமசரசமாகப் போகும்படி கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்டவரை பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிவரும்படி கோரியுள்ளார். சம்பந்தப்பட்டவர் காவல் நிலையம் வரவே அவரைக் கைதுசெய்து காவலில் வைத்தனர். மறுநாள் 16ஆம் திகதி அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிவான் 18ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை, வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் காயமடைந்த பெண்ணின் வீட்டுச் சென்ற மேற்படி குழுவின்
பிரதிநிதிகள் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் சமரசமாகப் போகும்படியும் நீதிமன்றுக்கு சாட்சியமளிக்க செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினர் எனக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக