தமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்தனர் மாணவர்கள் அமைப்பினர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தினர்.விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்!இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகவும், தொழில் ரீதியாக இருவரும் கூட்டாளிகள் என்றும் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். ஆனால் இந்த எதிர்ப்பினை நடிகர் விஜய்யோ, இயக்குநர் முருகதாசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக இருவரும் தொடர்ந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தில் வெறியாட்டம் போட்ட கயவர்களின் கூட்டாளிகளுடன் தமிழ் சினிமா உலகம் கைகோர்த்திருப்பதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்தித்து இந்தப் படத்தை தடை செய்யக் கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில், "சிங்கள அரசு தூக்கிப் போடும் எலும்புத் துண்டினைச் சுவைக்கும் சிலர், இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சுமூகமாக வாழ்வது போன்ற மாயையை உலகத்தினர் மத்தியில் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் இந்த கத்தி படமும். தமிழினப் படுகொலையாளிகள் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கைவிடக் கோரி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள். தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மனதை இந்த செயல் புண்படுத்தியுள்ளது. இந்த கத்தி படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செவி சாய்க்காவிட்டால், பெரும் போராட்டத்தை நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக