07 ஜூலை 2014

ஆட்களைப் பார்த்து உதவும் டக்ளஸ்!

கடந்த காலங்களில் என்னிடம் வந்து யார் அழுதாலும் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இன்றி உதவினேன். இப்போது நான் அப்படியில்லை. அவர்களைப்பற்றிச் சரியாக ஆராய்ந்த பின்னரே உதவும் நிலைக்கு மக்கள் என்னை மாற்றிவிட்டார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ். மாவட்டப் பாரவூர்திச் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கோண்டாவிலில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும் மணலை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். இந்தத் திட்டம் இன்னும் ஒரு வார காலத்தினுள் நடைமுறைக்குவரும். இதன்மூலம் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு தொழில் வாய்ப்புச் சீராகக் கிடைக்கும். இதனைவிட யாழ். மாவட்டத்துக்கு திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் சீமெந்து இறக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு உப்பு உற்பத்தி ஆரம்பித்ததும் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக் கிட்டும். இவை எல்லாம் ஒருசேரக் கிடைக்க நீங்கள் முதலில் எனக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும். வேறு அரசியல்வாதிகளிடம் சென்று ஏமாராமல் என்னை அணுகி உங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் பழிவாங்குபவன் அல்லன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக்கூட நான் பழிவாங்க முயற்சிக்க வில்லை. அவரின்மேல் எனக்குக் கோபம் இருந்தது. ஏன் என்றால் அவர் எனது தம்பியை கொன்றார். நான் யாரையும் அழிக்க - இரத்தம் சிந்த கட்சியை நடத்தவில்லை. உங்களை அழைக்கவும் இல்லை. உங்களுடைய எதிர் காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றுகிறேன் என்று டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக