29 ஜூலை 2014

இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ

இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவருமே பங்கேற்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். கொழும்பில் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4வது சர்வதேச ராணுவ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் தாம் கலந்து கொள்ள இருப்பதாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: - தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்புவில் ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இராணுவக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கின்றது. - இக்கருத்தங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது. - இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. - அண்மையில் சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் சிங்கள அதிபர் இராஜபக்சேவைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. - இந்நிலையில், இலங்கை அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழுவும் பங்கேற்பது தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும். - சிங்கப்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி பேசும்பொழுது, "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது" என்று குறிப்பிட்டு இருக்கின்றார். - அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டதை சர்வ சாதாரணமாக நினைக்கிறாரா? இதுபோன்ற மிகவும் ஆபத்தான நச்சுக் கருத்தை சேஷாத்திரி சாரி தெரிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். - உலகம் தடை செய்து இருக்கின்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குண்டுகளை வீசியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து மனிதப் பேரழிவை நடத்திய இராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை இங்கிலாந்து சேனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் விசாரணைக்குழுவும் இதனை உறுதி செய்து இருக்கின்றது. - பன்னாட்டு நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்வது, இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு நீதியை குழிதோண்டிப் புதைக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. - ஐ.நா. மனித உரிமைகள் குழுவில், இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படும் வகையில், இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக