30 ஜூன் 2014

ஈழ இளைஞன் பலி!உறவினர் போராட்டம்!

மருத்துவ கவனிப்பின்றி ஈழ அகதி இந்தியாவில் சாவு; உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம்!சரியாக மருத்துவ கவனிப்பு வழங்கப்படாத காரணத்தால் இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அத்துடன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புதுப்பற்றில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜீ.சந்திரசேகரன் (வயது - 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கூடத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டது என்றும் அதன்பின்னரே உடல் வலி அதிகரித்து அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு பிரதான வைத்தியர் இல்லாத நிலையில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சந்திரசேகரன் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்துடன் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருத்துவ கவனக்குறைவு குறித்து அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் கே.வரதராஜன் தெரிவித்தார். சந்திரசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக இந்திரா காந்தி அரச பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

29 ஜூன் 2014

இந்து மயானத்திற்கும் உரிமை கோருகிறது சிங்களப்படை!

வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடிகூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலம் ஒன்றைத் தகனம் செய்ய சென்ற போது பௌத்த மதகுரு ஒருவரும் படையினரும் இணைந்து தடைவிதித்துள்ளனர். உடலைத் தகனம் செய்வதற்காக பேயாடிகூழாங்குளம் சுடலையில் உறவினர்கள் ஏற்பாடுகளைச் செய்வதற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த படையினர், உடலை இங்கு எரியூட்டமுடியாது என்று தடுத்துள்ளனர். குறித்த காணி தமது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப்பகுதி கிராமசேவகர், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலர் ஆகியோர் அங்கு கூடினர். காலம் காலமாக இந்த பகுதியில் சுடலை இருந்தது என்றும், அந்த இடத்தில் எரியூட்ட அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் படையினருடன் கலந்துரையாடினர். இதனால் அப்பகுதியிலிருந்து படையினர் கலைந்து சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

28 ஜூன் 2014

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் சவக்குழி தோண்டுகிறார் கோத்தபாய!

News Serviceபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதிக்கு மாத்திரமல்லாது அவரது அரசாங்கத்தின் அரசியலுக்கும் சவக்குழியை தோண்டும் நிலைக்குச் சென்றுள்ளதாக ராவய பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதாரணமாகும். பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் இயற்கைக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சின் பலத்தில் மேற்கொண்டு வரும் ஒன்றாக இருக்கின்றது. அவரது பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அமைதியாக வேடிக்கை பார்த்தது.பாதுகாப்புச் செயலாளருடன் ஞானசார தேரருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி அனைவரும் அறிந்திருந்ததே இதற்கு காரணமாகும். நாட்டை இராணுவ மயமாக்கலுக்கு தள்ளுவதே கோத்தபாய ராஜபக்ஷ நாட்டுக்கு மேற்கொண்டு வரும் மிகவும் கெடுதியான நடவடிக்கையாகும். சிவில் அதிகாரிகள் வகிக்க வேண்டிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தல், இராணுவ அதிகாரிகளை தூதுவர் பதவிகளுக்கு நியமித்தல், கல்வித்துறையை இராணுவமயப்படுத்தியமை ஆகியவற்றுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டை இராணுவமயத்திற்குள் தள்ளியுள்ளதுடன் சிவில் அரசியல் நிறுவனங்களை அழித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவே வழக்கு விசாரணைகளை நடத்தாது குற்றவாளிகளை கொலை செய்யும் கொடூரமான சம்பிரதாயத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணான பாசிசவாத செயல் எனவும் விக்டர் ஜவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில். அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.இப்படி எங்கும் வியாபித்துள்ள சினிமாவை வைத்தே ஈழ ஆதரவுக் குரல்களை முடக்கிப் போட முயற்சித்துள்ளார் இலங்கை அதிபரும், தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றியவருமான ராஜபக்சே. ஈழப் போருக்குப் பின் தமிழ் உணர்வாளர்கள், போராட்ட இயக்கங்களை வலுவிழக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். புலம்பெயர் தமிழர்களால்தான் ஈழத்துக்கு விடிவு என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுக்குள் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். ஒரு நாட்டில் ஆயிரம் இலங்கை தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் 1001 குழுக்கள் உருவாகியிருக்கின்றன. இவர் தலைமை அவருக்குப் பிடிக்காது... அவர் தலைமை இவருக்குப் பிடிக்காது... என தமிழ் நண்டுகளாக அவர்களை பிளவுபட வைத்த ராஜபக்சே, அவர்களில் பலரை தனது பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார். பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களோ, ஈழப் போராட்டம் தங்கள் சம்பந்தமே இல்லாத சமாச்சாரம் என்ற ரீதியில் கோட்டு சூட்டுடன் கொழும்பு போய் ராஜபக்சே, கோத்தபாயக்களுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வர்த்தக கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர். ஆக, புலம்பெயர் அமைப்புகளின் வேர்களை கலகலக்க வைத்த ராஜபக்சேவால், நெருங்கவே முடியாத இடமாகத் திகழ்வது தமிழகம்தான். இங்கே இன்னும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த கோரத்தின் தாக்கம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் தமிழக முதல்வரும் முழுமையாக ராஜபக்சே மற்றும் அவருக்கு ஆதரவு தருவோரை எதிர்த்து வருகிறார். மற்ற யாரைக் காட்டிலும் ராஜபக்சேவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது ஜெயலலிதாதான். தமிழகத்தில் தன் ஆதரவுத் தளத்தைப் பதிக்க அரசியல் பயன்படாது என்பதைப் புரிந்து கொண்ட ராஜபக்சே, சினிமா மூலம் அதைச் சாதிக்க முனைந்துள்ளார்.அதன் முதல் கட்டமாகவே தனது வர்த்தக கூட்டாளியான லைக்கா மொபைல்காரர்களை அய்ங்கரன் கருணா மூலம் கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன முணகல்கள் எழுந்ததோடு சரி. இப்பதோது சர்வம் லைக்கா மயம். முதல் படமே விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி. போதாக்குறைக்கு ஏ ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட லைக்கா நிறுவனத்தின் பிஆர்ஓவாகவே மாறியிருக்கிறார். லைக்கா புரொடக்ஷனில் படம் பண்ண இளம் இயக்குநர்கள், பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம் ஏஆர் முருகதாஸ். அதுமட்டுமல்ல, பிரபல நிறுவனங்களுடன் லைக்காவும் இணைந்து பெரிய படம் பண்ண தயாராக உள்ளது என்று பேசி வருகிறார். லைக்காவுடன் தன் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் படம் பண்ணும் என்று கூறிவருகிறார் முருகதாஸ். இன்னொரு பக்கம் சிங்கள சினிமாவையே தமிழகத்தில் திரையிட, தன் முகவர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்சே. அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் சொன்னபோது, சினிமா வேறு இனப்பிரச்சினை வேறு என்று வெட்டி நியாயம் பேசி, அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறது அறிவு ஜீவிகள் எனும் பெயரில் வக்கிரங்களைப் படைக்கும் ஒரு கூட்டம். ஆக தமிழ் சினிமாவில் ராஜபக்சேவின் முதல் முயற்சி மகா வெற்றிகரமாக நிறைவேறிய, மகிழ்வோடு மேலும் மேலும் கோடிகளைக் கொட்டத் தயாராகி வருகிறார்கள் லைக்கா மாதிரி நிறுவனங்கள், தமிழர் போர்வையில் சிங்களத்துக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் வியாபாரிகள்! சொல்வதற்கில்லை.. இன்று டெல்லிக்கு வந்து பெண்களுடன் ஆனந்தக் குளியல் போட்டு கும்மாளமாய் திரும்பிய நாமல் ராஜபக்சேவை வைத்து, நாளை பிரமாண்டமாய் ஒரு தமிழ்ப் படம் உருவாகலாம்... அதை முருகதாஸ்கள் பெருமிதத்தோடு இயக்கவும் செய்யலாம்.
நேற்றிருந்தவர் இன்றில்லாததுதானே சினிமா உலகம்!

27 ஜூன் 2014

இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை!

News Serviceஇத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் கனிஷ்ட புதல்வி எனவும் இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

26 ஜூன் 2014

அனந்தி எழிலனை பின்தொடரும் இருவர்!

தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத நபர்கள் இருவர் தன்னைப் பின்தொடர்வதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக குறித்த நபர்கள் தன்னை பின்தொடர்ந்து வருவதாகவும், தான் விஜயம் செய்யும் பகுதிகளுக்குச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போடப்பட்டிருந்த சிறீலங்கா காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான இனந்தெரியாத நபர்களின் பின்தொடர்தல் தன்னை அச்சமடைய வைக்க சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இருக்கலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்ததில் இருந்து இனந்தெரியாத நபர்கள் இருவர் என்னைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
பின்தொடரும் நபர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கில் தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்டதற்கான ( WP XI) இலக்கத்தகடு பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

25 ஜூன் 2014

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரம் வாயால் வர்ணிக்க முடியாது!ஜெனீவாவில் யுவதி சாட்சியம்!

முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்களைக் கொன்றுதான் அந்த இடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்ததை நான் நேரில் பார்த்தேன் என முள்ளிவாய்காலில் இருந்து உயிர் தப்பி ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழ் யுவதி ஒருவர் ஜெனீவாவில் சாட்சியம் அளித்துள்ளார்.
நாங்கள் எங்களுடைய பாதுகாப்புத் தேடி இரட்டை வாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் நோக்கிச் சென்ற போது, வழியில் அதிகளவான பிணங்கள் காணப்பட்டன. பெருமளவானோர் காயப்பட்ட நிலையில் எந்தவொரு மருத்து வசதிகளும் அற்ற நிலையில் காணப்பட்டார்கள்.
சாப்பாட்டுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பட்டினி கிடக்கும் அளவுக்கு அங்கு நிலைமை காணப்படவில்லை. ஆகக் குறைந்த கஞ்சி ஆவது குடிக்கக்கூடியதாக இருந்தது. உணவுக்காக வரிசையில் காந்திருந்த மக்கள் மீது மயக்கக் குண்டுகள் வீசி பெருமளவான மக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்கள்.
நான் எனது பெற்றோருடன் முள்ளிவாய்க்காலில் இருந்த போது 2009 ஆண்டு மே 14ஆம் நாள் மற்றும் 15 ஆம் நாள் பெருமளவில் பிணங்களே அப்பகுதியில் காணப்பட்டன.
நாங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்காக வட்டுகாகலுக்குச் சென்றபோது விடுதலைப் புலிகள் மாதிரி மாற்றப்பட்ட இராணுவத்தினர் மக்களையும் போரளிகளையும் சுட்டுக்கொன்றார்கள். இதனால் நாங்களும் நூற்றுக்கு மேற்பட்ட மக்களும் 17 ஆம் நாள் புதுக்குடியிருப்புத் திசை நோக்கிச் செல்லலாம் எனச் சென்றபோது வழியில் காணப்பட்ட சிறு சிறு பற்றைக்குள் பெண் பிள்ளைகளின் உடல்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது. (வாயால் வர்ணிக்க முடியாது)
அப்பகுதியில் தலைப்பாகை கட்டிய இந்திய இராணுவத்தினர் ஒத்த இராணுவத்தினர் இருந்ததை நான் நேரில் கண்டேன். அவர்கள் எல்லோரும் உயரமாகக் கணப்பட்டார்கள். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் வித்தியாசமாகவே இருந்தது.
https://www.youtube.com/watch?v=G3L61Jah1sY
இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுக்கலால் காட்டிக்கொடுப்புகள் நிகழ்த்தப்பட்டு பிடிச்சுச் செல்லப்பட்டவர்களை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அடித்தார்கள். அவர்களின் வாய்களிலிருந்து இருந்து இரத்தம் வழிந்ததை நான் அவதானித்தேன்.
இராமநாதன் அகதி முகாமில் புலனாய்வு இராணுவத்தினரால் தனது நீண்டகால நண்பியும் போராளியுமான சந்தியாவை விசாரணைக்கு அழைத்து தேநீருக்குள் மயக்க மருந்து கொடுத்து மயக்கப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டுள்ளார். இவ்வாறு 7 பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதேநேரம் இராணுவதினர் கூறும் இடங்களுக்கு எனது நண்பியின் தந்தை சந்தியாவை அழைத்து செல்வார். தந்தைக்கும் மகளின் நிலைமை தெரியும் ஆனால் அங்கு ஒன்றுமே செய்ய முடியாது. இவ்வாறு சிறீதர் தியேட்டர், பலாலி படை முகாம், தெல்லிப்பளைப் படை முகாம் எனப் பல முகாங்களுக்கு இராணுவத்தினரின் பாலியல் தேவைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். என பல விடயங்களை அவர் ஜெனீவாவில் சாட்சியமாக தெரிவித்துள்ளார்.

24 ஜூன் 2014

தமிழகத்தில் மாணவி பலாத்காரம் செய்து கொலை!

உத்தரப்பிரதேசம்
கரூரில் தலித் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா (17). பிளஸ் 2 முடித்திருந்த வினிதா, வரும் 1ஆம் தேதி கல்லூரியில் சேர இருந்தார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக வினிதா, கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிராமத்தில் இருந்து சைக்கிளில் வரும் வினிதா, கிருஷ்ணராயபுரத்தில் சைக்கிளை வைத்து விட்டு பேருந்தில் கரூரில் 5 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து பேருந்தில் கிருஷ்ணராயபுரம் வந்த வினிதா, அங்கிருந்து சைக்கிளில் ஒன்றரை கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு சென்றுள்ளார். இதனிடையே, இரவு ஆகியும் வினிதா வீட்டிற்கு வராத காரணத்தால் அவரது பெற்றோர், உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.இரவு 11 மணி அளவில் அங்குள்ள வெற்றிலை தோட்டத்தில் வினிதா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி வினிதாவின் பெற்றோர், உறவினர்கள் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து கரூர் மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) ராஜேஸ்வரி காவல்துறையினருடன் விரைந்து வந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்க மறுத்ததோடு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.வினிதாவின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. உடலை வாங்க மறுத்து வினிதாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் கரூர் அரசு மருத்துவமனை முன்பு பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, மாயனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் இரண்டு இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்நிலையில், கரூரில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வடகொரியா,சிரியா,ஈரான் வரிசையில் இலங்கை!

News Serviceஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிரியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்ள எத்தனிப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்த ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் மேம்பாடு ஏற்படவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகளின் மூலம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன நேர்ந்தது என்பது பற்றி புரிந்துகொள்ள இலங்கைக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டும். யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சிறந்த அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் இலங்கையில் நல்லிணக்கத்ததை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் காசியப் தெரிவித்துள்ளார்.

23 ஜூன் 2014

பயங்கரவாதிகளுடன் கோத்தபாய,அமெரிக்கா வைத்த சூடு!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில், பிரசுரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவின் ஒளிப்படம் ஒன்று கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அளுத்கம, பேருவளைப் பகுதிகளில், கடந்த 15ம் திகதி நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, கடந்த 16ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் கீழ், கருத்துப் பகுதியில், பொது பல சேனாவின் பொதுச்செயலர் அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோருடன் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச நிற்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் கீழ், இலங்கை பொதுபல சேனா தீவிரவாதிகளுடன், அதிபரின் சகோதரர் - பாதுகாப்புச்செயலர் கோத்தபய ராஜபக்ச என்று விளக்கக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கருத்துப் பகுதியிலேயே இடம்பெறுள்ள போதும், அமெரிக்க தூதரக இணைய கட்டுப்பாட்டாளருக்குத் தெரியாமல் இதனைப் பதிவேற்ற முடியாது என்று அரச தரப்பு விசனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசதரப்பினால், அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தப் படம் மற்றும் விளக்கக்குறிப்பை நீக்க அமெரிக்கத் தூதரகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அரசாங்கத்துக்கும், அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையிலான முறுகல் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்காவே பின்னணியில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

22 ஜூன் 2014

ஐ.நா.அதிகாரி எம்மிடம் விபரம் கோரினார்-சுரேஷ்

சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் போன்ற விவரங்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொண்டார் ஐ.நா. உதவிச் செயலர். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இரண்டாம் நாள் பேச்சு இன்று நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12.15 மணி வரை இந்தப் பேச்சு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்றைய சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா. அதிகாரிக்கு விளக்கினோம். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போது இடம்பெற்றக் கூறப்படும் மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் இன்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல். வடக்கு மாகாண சபையைச் சுதந்திரமாக இயக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடபகுதியிலுள்ள காணிகளை அரசு கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், இராணுவத் தலையீடுகளால் மக்களுக்கு ஏற்படும் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து நேற்று நாம் அவருக்கு தெளிவாக விளக்கினோம். இவ்வாறான பிரச்சினைகள்,நெருக்கடிகள் குறித்த விளக்கங்களையும் காரணங்களையும் இன்று கேட்டறிந்த அவர், எம்மிடம் ஆதாரங்களையும் கோரினார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அச்சுறுத்தல்கள்,நெருக்கடிகள் குறித்த ஆதாரபூர்வமான தகவல்களை நாம் இன்று ஐ.நா. அதிகாரியிடம் வழங்கினோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

21 ஜூன் 2014

பாணந்துறையில் முஸ்லீம் ஆடை நிறுவனம் எரிந்தது!

பாணந்துறை
இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள பாணத்துறை நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான ’’நோ லிமிட் ‘’ எனும் ஆடை வர்த்தக நிறுவனமொன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை இலங்கை நேரப்படி 3.15 அளவில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் கட்டிடம் முற்றும் அழிந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ அணைப்பு படையினரின் உதவியுடன் காலை 5.00 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்தக்
கட்டிடம் முற்றாக நாசமடைந்துவிட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன இது மின்சாரம் காரணமாக ஏற்பட்டதா இல்லாவிட்டால் சதி வேலையா என்பதைக் கண்டறிவதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் உதவியை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர் இழப்பு தொடர்பாக இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
முஸ்லிம் மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வரும் பாணந்துறை நகரில் இந்தத் தீ விபத்தின் பின்பு பதட்ட நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக போலிஸ் அதிரடி படையினரின் உதவியுடன் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாவாந்துறை
எனவே சில ஊடகங்கள் மற்றும் சமுக வலைத் தளங்களினால பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கிம் பாணதுறைப் பகுதிக்கு சென்று, அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார்.இதேவேளை இன்று அதிகாலையில் நாவாந்துறையில் உள்ள ஒரு பள்ளிவாசலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

20 ஜூன் 2014

தேசியத்தலைவரின் தேவையை உணரும் முஸ்லீம் மக்கள்!

பிரபாகரன் இருந்திருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என தர்கா நகர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாயொருவர் கதறி அழுததாக வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.வன்முறை இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது தன்னிடம் அந்த தாய் இவ்வாறு கூறி அழுததாக வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரபாகரன் மற்றும் தமிழ் மக்களுடைய போராட்ட உணர்வு இது நாள் வரையில் முஸ்லிம்களைப் பாதுகாத்துள்ளது என்ற செய்தியை அந்த பெண்மணியிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்னிலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ் பேரூந்து நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்த தகவலை தெரிவித்தார்.

பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

கண்டி - குருந்துகொல்ல பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்த பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். தாக்குதலை அடுத்து பிரதேசவாசிகள் பள்ளிவாசல் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர். கல்வீச்சுத் தாக்குதலால் பள்ளிவாசல் கண்ணாடிகள் மற்றும் சுவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் பேருவளை- அளுத்கம- தர்காநகர் தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 ஜூன் 2014

விஜித்த தேரருக்கு நடந்த கொடூரம்!

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்கள் கட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளான நிலையில் வட்டரெக விஜித்த தேரர் இன்று காலை 6.30 மணியளவில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான தேரர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் தேரரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்காவின் பிரதிநிதி!

அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினரை  கொழும்பில் சந்தித்துப் பேச்சுஇலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தாம் விரிவாக விளக்கினர் என்று கூட்டமைப்பு பிரதிநிதிகள் விளக்கினர்.

18 ஜூன் 2014

வறுமையால் மாணவன் தற்கொலை!

வறுமை காரணமாக 16 வயதேயான பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். தூக்கில் தொங்கிய நிலையில் அவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வன்னி இறுதி யுத்தத்தின் பின்னராக இடம்பெற்று வந்திருந்த நிலையில் வடமராட்சியின் கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் வசித்து வந்திருந்த நிலையினிலேயே அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். கருணாகரன் நிம்சன்(வயது 16)எனும் கரவெட்டி ஞானசாசிரியார் கல்லூரி மாணவனே திங்கட்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
குறித்த மாணவனது தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் மூத்த போராளியாக இருந்தவரெனவும் புனர்வாழ்வின் பின்னதாக விடிவிக்கப்பட்ட அவர் மீண்டும் மாவீரர் தினத்தை முன்னிட்டு துண்டுபிரசுரங்களை ஒட்டியதாகக் கைதாகி மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது. முன்னாள் போராளியான தனது தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்திருந்த நிலையில் தாங்கள் வசித்து வந்த குறித்த கொட்டில் வீட்டில் தூக்கில் தொங்கி அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ஊர் மக்களது உதவியுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது. மகனது இறுதிக்கிரியைகளில் பங்கு பற்ற தந்தையை இராணுவம் அனுமதித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு  எதிராக யாழில் போராட்டம்  - த.தே.ம.முன்னணி அறிவிப்பு!களுத்துறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிகிறார் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20-06-2014) காலை 9மணிக்கு யாழ்.பேருந்து நிலையம் முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆதரவு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், அடுத்தவாரம் கிளிநொச்சியிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

17 ஜூன் 2014

இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால்!

எப்போதாவது நடந்தே தீரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது. இதைக் கொண்டாட முடியாது. அதிக சோகத்தையும் வெளிப்படுத்த முடியாது. எதிர்த்துக் குரல் எழுப்பவும் முடியாது. ஏனென்றால், நாங்கள் கொல்லப்படும்போதோ… எரிக்கப்படும்போதோ… தொலைக்கப்படும்போதோ… குதறப்படும்போதோ… அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவே இல்லை. இன்னமும் மோசமாக… சிங்கள எசமானர்களது வேட்டையில், அவர்களும் கணிசமான அளவில் பங்கேற்றிருந்தார்கள்.
இந்த வேளையில், ஜெர்மனிய சிந்தனையாளரான மார்டின் நீய்மொய்லர் அவர்களது ‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்’ என்ற கவிதை வரியே ஞபகத்திற்கு வருகின்றது.
‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’கிட்லரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை அது. அவன் எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் பயம்… சுயநலம்… அறியாமை என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம். அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான். ஆனால் பயங்கரமான போர் நடந்துக் கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன? அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான். ஆனால் பாவம்… புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது. ‘ஐயகோ… நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே! அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவன் தனது முடிவை நோக்கி செல்கின்றான்.சிங்கள இனவாதக் கொடூரங்கள் தமிழர்களது வாழ்வையும், வளத்தையும் அழித்த காலத்தில் சக மனிதர்களாக… தமிழர்களாக… கொஞ்சமேனும் இரக்கமற்றவர்களாக, பாறைகளாக இறுகியே கிடந்தார்கள். ‘முதலில் அவர்கள் தமிழர்களுக்காக வந்தார்கள்… நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தமிழன் அல்ல இஸ்லாமியன்!!!’ என்றே எண்ணியிருந்தார்கள்.
இயேசு நாதரைப் போலவே, தமிழர்களும் இவர்களுக்காக இரக்கப்பட்டார்கள். ‘இதன்பொருட்டு… நாளை இவர்கள் தண்டிக்கப்படலாகாது…’ என்றே பிரார்த்தித்திருந்தார்கள். தமிழர்களது பலம் அழிக்கப்பட்டால், அதன் பின்னர் சிங்கள இனவாத பூதம் இவர்களை நோக்கித் திரும்பும் என்ற வரலாற்றுப் பார்வையை இழந்திருந்ததனால், இன்று, இஸ்லாமியத் தமிழர்களை சிங்கள இனவாதம் இன்னொரு கொலைக் களத்தில் நிறுத்தியிருக்கின்றது.
ரஷ்யப் பிரமாண்டம் பொருளாதாரப் பூகம்பத்தில் சிக்கித் தவித்திருந்த காலத்தில், மத்திய கிழக்கின் எண்ணை வள செல்வந்த நாடுகள் கைகொடுத்திருந்தால், இத்தனை பேரழிவுகள் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியிருக்காது. எதிர்த்து நிற்கும் பலம் எதுவுமற்ற நிலையில், வல்லவன் வெட்டியதே வாய்க்கால் ஆக, மத்திய கிழக்கில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டதை தமிழர்கள் யாரும் நியாயப்படுத்தியதில்லை. எனினும், கிழக்கில் நடைபெற்ற அத்தனை கூட்டுப் படுகொலைகளிலும் இஸ்லாமிய இயக்கங்களது பங்கேற்பினை மறுதலிக்கவும் முடியாது. சிங்களத்து இனவாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களே தமிழர்களைக் கருவறுக்கும் ஊடுருவலையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் சிங்களத்திற்காகச் செய்து முடித்திருந்தார்கள்.
தமிழர்களை இதற்கு மேல் நொருக்க முடியாது என்ற நிலையில், சிங்களத்தின் இனவெறிப் பாய்ச்சல் இஸ்லாமிய சமூகத்தை நோக்கியதாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை வரலாற்றுப் பாடங்களாகக் கொள்வோம். கிறிஸ்தவர்களும், இந்துக்களும் போல், மதம் தாண்டிய தமிழர்களாக… மனிதர்களாக இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லையேல்… இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாததாகிவிடும்!

சுவிசிலிருந்து கதிரவன்

16 ஜூன் 2014

களுத்துறைக் கலவரத்தில் முஸ்லீம்கள் மூவர் படுகொலை!

களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பொதுபல சேனாவுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலில், பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு நேற்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.
அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன. இதில் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்கள் மீது கல் வீசப்பட்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர். ஆனால், இந்தச் சம்பவங்களில் எவை முதலிலும், எவை பின்னரும் நடந்தன என்பது தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்றுமாலை அளுத்கமையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்ர் புருவளை நகரிலும் வன்முறைகள் பரவியதால் அங்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தெகிவளையில் உள்ள முஸ்லிம்களின் கடை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல்வீசித் தாக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளுர் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தான் தனது சொந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்பட்டதாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

15 ஜூன் 2014

வெற்றிலைக்கும் தடை வந்தது!


மாம்பழங்களைத் தொடர்ந்து வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு – ஐரோப்பிய யூனியன் உத்தரவுஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா ஒன்றியம்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது.இந்தத் தடை குறித்து ஐரோப்பிய ஒன்றியம், ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் "சால்மொலினா" என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே இந்த வெற்றிலைகளை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளது. மேலும் மற்ற நாடுகளான வங்காளம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலின் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

சாட்சி சொன்னால் விபரீதமாகும் என்கிறார் ஹெகலிய!

அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போர் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறீலங்காவின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினர் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர்
இது ஓர் பாரதூரமான நிலைமை எனவும் சாட்சியமளிப்போர் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் புலம்பெயர் சமூகம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க தயாராகி வருகின்றனர்.
உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் பிழையாக அர்த்தப்படுத்தப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ரம்புக்வெல்ல  எச்சரித்துள்ளார்.இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது,ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டும் பணிகளில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஈடுபடும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

14 ஜூன் 2014

நவிபிள்ளைக்கு பான்கீமூன் பாராட்டு!

சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் மனித உரிமைகளை மதித்து உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவது சிறிலங்கா அரசின் தலையாய கடமையாகுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார் என நியூயோர்க்கில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பான் கீ மூனின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

13 ஜூன் 2014

ஊர்காவற்றுறையில் இப்படியும் அசிங்கக்கூட்டமா?

யாழ்,ஊர்காவற்றுறை கல்வந்தாழ்வுப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து தனியார் கல்வி நிலையம் சென்றுள்ளார்.
அப்போது இம் மாணவியைப் பின் தொடர்ந்து வந்த இரு காவாலிகள் மாணவியை முந்திச் சென்று ஆள் நடமாற்றம் அற்ற பகுதி வந்தவுடன் மாணவியை மறித்து தமது ஆடைகளை களைந்து காட்டியுள்ளனர்.இதனால் பெரும் அச்சத்துக்கு உள்ளான மாணவி அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அப்போது அந்த மாணவியைத் துரத்திய இரு காவாலிகளும் சனநடமாட்டம் கண்டவுடன் அவ்விடத்தை விட்டு ஓடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்து தப்பிச்சென்ற மாணவி பெற்றோரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிசாரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 18, 19 வயதான இரு காவாலிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு பன்னிருவர் நியமிப்பு!

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருக்கின்றார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேசமயம், இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் பணி இந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் கடந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

12 ஜூன் 2014

இலங்கையை மறந்த லண்டன் மாநாடு!

மோதல்களின் போது பாலியல் வல்லுறவைத் தடுக்கும் சர்வதேச மாநாட்டில் இலங்கை குறித்த விவாதத்துக்கு ஏன் இடமளிக்கவில்லை?- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளன பிரித்தானிய ஊடகங்கள். பிரித்தானியாவின் லண்டனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த மாநாடு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவரும் பிரபல நடிகையுமான ஏஞ்சலினா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் 140 வரையான நாடுகள் பங்கேற்றுள்ள போதும், இலங்கை இதனைப் புறக்கணித்துள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில், சிரியா, கொங்கோ உள்ளிட்ட நாடுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதும், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இலங்கையில் போரின் போது, பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ள போதும், அதற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ள போதும், இந்த மாநாட்டில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்கள் விசனம் வெளியிட்டுள்ளன. பாலியல் ரீதியாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட பலர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும், போரின் போது இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான போதிலும், இன்னும் இத்தகைய குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் உள்ள போதிலும் இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் கவனிக்கப்படாமல் போயுள்ளது குறித்தும் இந்த ஊடகங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலக மாநாடு ஏன் மறந்து போனது என்றும் இந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

11 ஜூன் 2014

சாட்சி சொல்ல இருந்தவர் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி முருகன் கோவிலின் பூந்தோட்டத்திலிருந்து சித்தாண்டி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய சாமித்தம்பி விநாயகம் என்பவர் சடலமாக புதன்கிழமை (11.06.14) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.சித்தாண்டி முருகன் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கொன்று தொடர்பில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கு சாட்சியாக இவர் இன்றையதினம் சமூகமளிக்கவிருந்தாரென உறவினர்கள் தெரிவித்ததாக சித்தாண்டி 03 பிரிவு கிராம அலுவலகர் த.சுதாகரன் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

10 ஜூன் 2014

பாலியல் வன்முறையைத் தடுக்கும் மாநாட்டில் இலங்கை இல்லை!

மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு ஜூன்- 10ம் திகதி செவ்வாய்க்கிழமை லண்டனில் தொடங்குகின்றது.இந்த நான்கு நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரான ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தின் துணைத் தூதர் நெவில் டி சில்வா பிபிசியிடம் கூறினார்.மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரிக்கும் நாடுகளை மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பிதழ் விடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.'நாங்கள் மாநாட்டில் பங்குபற்ற விரும்பினோம். ஆனால், பிரகடனத்தை அங்கீகரிக்காத நிலையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது' என்றார் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத்தூதர் நெவில் டி சில்வா.
மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை இலங்கை மட்டுமன்றி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
'மாநாட்டின் பிரகடனத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை'
இந்தப் பிரகடனத்தை இலங்கை ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இதற்கான விளக்கத்தைப் பெற பிபிசி எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
லண்டன் எக்ஸல் மண்டபத்தில் ஜூன் 10ம் திகதி முதல் 13-ம் திகதி வரையான காலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடே, மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான மிகப்பெரிய மாநாடாக அமையவுள்ளது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரித்துள்ள எல்லா அரசாங்கங்களும் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ தொழிற்சார் நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் பிரகடனத்தின் மூலம் அளிக்கப்படுகின்ற உறுதிமொழிகளை பெண்கள், சிறார்கள் மற்றும் ஆண்களை பாலியல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளாக மாற்றுவதே மாநாட்டின் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்

09 ஜூன் 2014

கணவரை விசாரித்ததும் படையினர் சடலத்தைக் காண்பித்தார்கள்!

வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற கணவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன். இது தொடர்பில் வந்தாறுமூலையிலுள்ளஇராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தேன். இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு சடலம் கிடப்பதாகவும் என்னை போய் பார்க்குமாறும் அவர்கள் எனக்கு கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது, எனது கணவர் இறந்து கிடந்தார் என்று ஆரையம்பதி பிரசேத்தைச் சேர்ந்த எம்.கமலராணி என்பவர் கூறினார்.
மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது கமலராணி, தனது கணவர் தொடர்பில் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கூறிய அவர், 'எனது கனவரின் பெயர் பி.சங்கரன் அவருக்கு வயது 37 ஆகும். எனது கணவர் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீட்டிலிருந்து வேலைக்காக சென்றவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன்.
இதை எனக்கு ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரே உறுதிப்படுத்தினார். இதையத்து நான் வந்தாறுமூலைப் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று அங்கிருந்த இராணுவத்தினரிடம் எனது கணவரைப்பற்றி விசாரித்தேன். அந்த இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு சடலம் கிடப்பதாகவும் என்னை போய் பார்க்குமாறும் அவர்கள் எனக்கு கூறினார்கள்.
நான் போய் பார்த்தேன். அது எனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்தினேன். எனது கணவர் எந்தவொரு இயக்கத்திலும் இருக்கவில்லை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு பிள்ளை மரணித்து விட்டது. எனது கணவர் கடத்தப்பட்டது முதல் எங்களது குடும்ப நிலைமை மிகவும் கஸ்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
இதேவேளை, ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.குணநாயகி எனும் தாய், தனது மகன் கைலாசபிள்ளை குகதாசன் தொடர்பில் கூறியதாவது,
'கைலாசப்பிள்ளை குகதாசன் என்பவர் எனது மகன். அவருக்க அன்று வயது 22. அவர் 17.12.2006ஆம் திகதியன்று வீட்டிலிருந்து கொழும்புக்கு செல்வதற்காக காத்தான்குடிக்கு பஸ் வண்டிக்கு ஆசனம் புக் பண்ணச் சென்றார். அவர் அன்றிலிருந்து வீடு திரும்பவில்லை. அன்று ஆரையம்பதி பிரதேசத்திலிருந்த சாந்தன் குழுவினர் எனது மகனை கடத்திச் சென்றதாக நான் அறிந்தேன்.
பின்னர் எனது மகன், சாந்தனின் அலுவலகத்தில் உயிருடன் இருப்பதாக அறிந்து அங்கு சென்று எனது மகனை தாருங்கள் எனக் கேட்டேன். ஆனால் எனது மகன் மீண்டும் வரவில்லை என்று குணநாயகி தெரிவித்தார்.
தியாகராசா கமலேஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
'எனது சகோதரர் மீன் வியாபாரத்திற்காக ஆரையம்பதியிலிருந்து ஏறாவூர் பிரதேசத்திற்கு சென்றார். 29.3.1991 அன்று அவர் வீட்டிலிருந்து மீன் வியாபாரத்திற்காக ஏறாவூர் பிரதேசத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் அவரைத் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை.
இரண்டு மாதத்திற்கு பிறகு தகவல் கிடைத்தது. எனது சகோதரரை கொம்மாதுறையில் வைத்து இராணுவம் கடத்திச் சென்று விட்டதாக அறிந்தேன். எனது சகோதரர் எந்தவொரு இயக்கத்திலும் இருக்கவில்லை' என கமலேஸ்வரி கூறினார்.
ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த என்.தங்கரட்ணம் என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
'எனது கனவர் கதிர்காமத்தம்பி நடராசா, கடந்த 3.3.1985ஆம் ஆண்டு காத்தான்குடிப் பகுதிக்கு மேசன் வேலைக்காக சென்றார். பின்னர் அவர் வீடு வரவில்லை. நான் அவரை பல இடங்களிலும் தேடினேன் கிடைக்கவில்லை. பின்னர் அவர் கடத்தப்பட்டுவிட்டதாக அறிந்தேன்' என்றார்.
ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சாட்சியமளிக்கையில்,
எனது பிள்ளை ரி.கோமதி கடந்த 12.3.1990ஆம் ஆண்டு டியூசன் வகுப்புக்காக வீட்டிலிருந்து சென்றவர் இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றார்.

08 ஜூன் 2014

நியுசிலாந்து நீதிபதி ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தலைமையேற்கிறார்!

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா நிபுணர் குவின் தலைவராக, நியுசிலாந்தைச் சேர்ந்த டேம் சில்வியா கார்ட்ரைட் என்ற முன்னாள் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
70 வயதான டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றியவராவார்.
இவரது தலைமையிலான ஐ.நா நிபுணர்குழுவின் விசாரணை வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.
தனது பெயரை வெளியிட விரும்பாத முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், நியுசிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.
இவர் நீதிபதியாக இருந்த போது, மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றவர்.
பின்னர், 2001ம் ஆண்டில் இருந்து2006ம் ஆண்டு வரை இவர் நியுசிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

07 ஜூன் 2014

மீண்டும் இரண்டு சகோதரிகள் கற்பழிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் இரண்டு சகோதரிகள் மூன்றுபேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தலித் சகோதரிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அங்கு மீண்டும் இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உள்ள ஷியாபூர் கிராமத்தை சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய சகோதரிகள் 2 பேர் அருகே உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றனர்.
அப்போது அவர்களை வழிமறைத்த 3 பேர் கொண்ட கும்பல் இரு இளம் பெண்களையும் தூக்கி சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராஜ் பால், மகிபால், சஞ்சய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளுக்கான இணைப்பாளராக சன்டரா பெய்டாஸ் தெரிவு!

Sandra Beidas)_CIஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை பெயரிட உள்ளார். விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சனட்ரா பெய்டாஸ் (Sandra Beidas)நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாத அமர்வுகளின் போது அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவிற்கான பிரதிநிதிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதிநிதிகள் தெரிவின் பின்னர், ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிற்கு பிரதிநிதிகள் அறிமுகம் செய்து வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக் குழுவுடன் இலங்கை உத்தியோகபூர்வமான தொடர்புகளைப் பேண வேண்டுமென நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

06 ஜூன் 2014

மகிந்தவின் தந்திரம் மோடியிடம் எடுபடாது!

யாழில் மகிந்தர்
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்கு அழுத்தத்தை பிரயோகித்திருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒருவித கசப்பு தன்மையை தோற்றுவித்திருப்பதாக நவசமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதே வேளை இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கிடம் ஏமாற்று வாக்குறுதிகளை வழங்கி அவரை ஏமாற்றி வந்தது மோடியிடம் செல்லுபடியாகாது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உணர்ந்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற் கண்டவாறு தெரிவித் தார்.
விக்கிரமபாகு கரு ணாரத்ன இங்கு மேலும் கூறுகையில்,
இலங்கையை பொறுத்த வரையில் சிறுபான்மையினர் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்ற போதிலும் மாகாணத்துக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படாது முட்டுக்கட்டை போடப்பட்ட நிலைமை காணப்படுகின்றது.
வடமாகாண சபையானது அரசாங்கத்தின் பிடிக்குள்ளேயே இருந்து வருகின்றது. இதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாக மாறியிருக்கின்றது.இது ஒரு புறம் இருக்க வடக்கில் நில அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அங்கு பல்லாயிரக்கணக்கான காணிகள் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டன. தற்போது புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுபோதாதமைக்கு தெற்கில் இருந்து சிங்கள மக்களும் வடக்கில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு வெளிநாட்டு சக்திகளை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றது.
ஆனால் கூட்டமைப்பு இதனை தவிர்த்து தமக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமது எல்லைகளை எட்டமுடியும். கூட்டமைப்பு அவ்வாறு செயற்பட்டால் நவசமசமாஜக்கட்சியும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

05 ஜூன் 2014

மத்திய அரசும் தமிழக அரசும் சுமூக உறவில்!

பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா: டெல்லி அரசியலில் புதிய திருப்பம்டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பாஜக தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து சந்தித்து வந்தது அரசியல் அரங்கில் புதிய பாதைக்கு வித்திட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் இருந்த வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். ஆனால் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.இந்த நிலையில் பெங்களூருவில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் குடைச்சலாக இருப்பதால் பாஜக தயவை ஜெயலலிதா நாடுவதாக கூறப்படுகின்றது. பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவின் வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். அவர் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவை அவர் தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்திலத்திற்கே வந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அதே போல மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவருடைய அலுவலகம் சென்று ஜெயலலிதா சந்தித்தார். கடந்த முறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருமுறை கூட ஜெயலலிதா சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் முழு விவரமும் ரவிசங்கர் பிரசாத்துக்கு தெரியுமாம். ஆனால் ரவி சங்கர் பிரசாத்தே தன்னை நேரில் வந்து சந்தித்ததால் உள்ளம் நெகிழ்ந்து போன ஜெயலலிதா தனக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து சட்டப்படி விடுதலை கிடைக்கும் என நம்புகின்றாராம். இப்படி மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவிடன் கரிசனமாக இருப்பதால் பாஜகவுடன் மிக இணக்கமான உறவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

04 ஜூன் 2014

மோடிக்கு மடங்கினார் மகிந்தர்!

News Serviceஇரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது.
வடமாகாணத்தின் முதல்வராக பதவியேற்றவுடன் விக்னேஸ்வரன் இந்தியாவின் இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியிருந்தார். இலங்கையில் தமிழர், சிங்களவர் இடையிலான பிரச்சினை ஒரு குடும்பத்தின் உள்விவகாரம். இன்று சண்டையிட்டுக்கொள்ளும் நாம் நாளை சமாதானமடைவோம். இதில் வெளியார், குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது என கூறியிருந்தார். இந்த கருத்தினால் அவர், இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகளின் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். அது வேறு விடயம்.
ஆனால், இந்த கருத்தை கூறியதன் மூலம் விக்னேஸ்வரன் இலங்கை அரசுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பியிருந்தார். நாம் ஒரே குடும்பமாக வாழ்ந்து எம் பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம் என்பதுவே அதுவாகும். ஆனால், இலங்கை அரசு அதை கணக்கிலும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று விக்னேஸ்வரனின் கட்சி, சந்திக்க நேரம் ஒதுக்கும்படி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து, கோரிக்கை விடுத்து கடிதம் எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி இந்த அரசு தான் தள்ளுகிறது. உள்நாட்டு பிரச்சினைக்கு உலக நாடுகளிடம் தீர்வை கோருகிறோம் என தமிழர்களை இனி எவரும் குறை கூற கூடாது. ஐநா சபையையும், இந்தியாவையும் நோக்கி நாம் செல்வதற்கு இந்த முட்டாள் அரசாங்கம்தான் காரணம் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை நாட்டு பிரிவினையை எதிர்க்கிறோம்; ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஐ அமுல் செய்து, 13க்கு மேலே செல்லுங்கள் என பிரதமர் மோடி கடுமையாக கூறிவிட்டார். அத்துடன் அவர் நேற்று, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை இருகரங்கூப்பி வரவேற்று உரையாடியுள்ளார். அவர்கள் இருவரும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். இதன்மூலம் ஒருநாட்டு பிரதமர் தனது நாட்டின் இன்னொரு கட்சியை சார்ந்த ஒரு மாநில முதல்வரை எவ்விதம் நாகரீகமாக நடத்த வேண்டும் என்ற பாடத்தையும் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கற்று கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த விமல் வீரவன்ச கட்சி, ஹெல உறுமய, தேசிய தேசப்பற்று இயக்கம் ஆகியவை இன்று எங்கே? பாராளுமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய அரசு தரப்பு அஸ்வர் எம்பி இன்று எங்கே? முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி போகும் முன்னர், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுவிக்கப்பட்ட வேகம்தான் என்ன?
13ஐ பற்றி பேசவே பேசாதீர்கள். பேச வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அகம்பாவத்துடன் பேசியவர்கள், விக்னேஸ்வரனின் நல்லெண்ண கருத்தை தூக்கி எறிந்தவர்கள், இன்று 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என சொல்கிறார்கள். இனி நாளை இன்னொரு மோடி சந்திப்புக்கு பிறகு போலிஸ் அதிகாரத்தையும் தருகிறோம் என சொன்னாலும் ஆச்சரியமில்லை. உள்நாட்டில் நாம் கெஞ்சினாலும் சட்டத்தில் உள்ள உரிமையைகூட வழங்க மாட்டீர்கள். ஆனால், வெளிநாட்டில் பலம் பொருந்தியவர்கள் அழுத்தம் கொடுத்தால் இணங்குகிறீர்கள். ஆகவேதான் கேட்கிறேன், மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா?

சிங்களப்படைக்கு ஆட்களை சேர்ப்போருக்கு எச்சரிக்கை!

கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக்கொள்வது நியாயப்படுத்த முடியாததொன்று. சம்பந்தப்பட்ட அலுவலர்களும் தமது கடமைகளை புறம்தள்ளிவிட்டு இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் காலமொன்று வருமென சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
அச்சுவேலியில் காணி சுவீகரிப்புக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐங்கரநேசன் கோபம் மேலிட்ட நிலையில் பொலிஸ், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் நடைமுறையை முன்னிலைப்படுத்தி கூறி விசனம் தெரிவித்திருந்தார்.
காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் கடந்த திங்கட்கிழமை அச்சுவேலி யூனியன் இராணுவ முகாமுக்கு அருகில் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் வருகை தந்திருந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரோடும் நிலஅளவை அதிகாரிகளோடும் ஆக்ரோசமான கருத்துப் பரிமாறல் இடம்பெற்றது.
பெருமளவில் பொதுமக்களும் கூடி இருந்தனர். கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகளும் காணப்பட்டனர். அமைச்சர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்; அரசின் முறைகேடான செயற்பாடுகள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளன. அரச அலுவலர்களை முறைகேடான முறையில் அரசு பயன்படுத்தி இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புச் செய்கின்றது. இந்த விடயத்தில் அலுவலர்களும் தமது நாளாந்த கடமைகளைத் தவிர்த்து இராணுவத்துக்கு ஆள்களைத் திரட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

03 ஜூன் 2014

பாஜக அலுவலகத்தில் முண்டே உடல்,தலைவர்கள் அஞ்சலி!

சாலை விபத்தில் மரணம் அடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில்  வைக்கப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.டெல்லியில் விமான நிலையம் அருகே காலை 6.20 மணியளவில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த கோபிநாத் முண்டே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சைப் பலனின்றி காலை 7.20 மணிக்கு அவர் உயிரிழந்தார். முண்டேவின் மரணத்தை அடுத்து அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. உள்காயம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பரிசோதனையை அடுத்து அவரது உடல் ராணுவ வாகனம் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முண்டேவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தனர். கோபிநாத் முண்டேவின் உடல் நாளை மகாராஷ்டிரா மாநிலம் பராலியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

02 ஜூன் 2014

ஐ.நா விசாரணைக்குழுவில் 13 உறுப்பினர்கள்!

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளதாகவும், இரண்டு அதிகாரிகள் மேற்பார்வை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரசாயன பகுப்பாய்பு டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு போன்றன தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும் விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.
எதிர்வரும் எட்டு மாத காலப்பகுதியில் குறித்த விசாரணைக் குழுவின் அதிகாரிகள் இலங்கை, வட அமெரிக்கா, ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நிபுணர்கள் பத்து மாத கால அடிப்படையில் விசாரணைக் குழுவிற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க உள்ளனர். சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமான ஓர் அதிகாரி இந்தக் குழுவினை வழி நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத கடத்தல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகளுடனும் கலந்தோசிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் பத்து நாட்களுக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

01 ஜூன் 2014

சிறீலங்கா விமானப்படைத் தளபதி மரணம்!

air_chief_marshal_m.j.t._de_s._gunawardenaசிறிலங்கா விமானப்படையின் எட்டாவது தளபதியான எயர் சீவ் மார்சல் ரெறன்ஸ் குணவர்த்தன நேற்று காலமானார். இரண்டாம் ஈழப்போர் காலத்தில் இவரே சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். 1990 ஓகஸ்ட் 1ம் நாள் தொடக்கம் 1994 பெப்ரவரி 16ம் நாள் வரை இவர் சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
பெல் உலங்குவானூர்திகள் மற்றும் சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானங்களுடன் செயற்பட்ட சிறிலங்கா விமானப்படை, இவரது காலகட்டத்திலேயே நவீன மயப்படுத்தப்பட்டது.
புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்கள் என்பனவும், எம்.ஐ.- 17 உலங்கு வானூர்திகளும் இவரது காலத்தில் சிறிலங்கா விமானப்படையால் கொள்வனவு செய்யப்பட்டன.
இவரது பதவிக்காலத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் வடக்கில் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.