12 நவம்பர் 2013

வலி,வடக்கில் ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்கக்கோரி போராட்டம்!

சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர்த்த வேண்டி 5தினங்களுக்கு இந்தத் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
அதன்படி வலி.வடக்கின் 24 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 6382 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் விழுங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தின் ஆரம்பத்தில் சுமார் 300 பேர் வருகை தந்தனர்.
தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வசிக்கும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்தவண்ணமுள்ளனர். வடக்கு கிழக்;கிற்கு வெளியில் மாத்திரமின்றி சிலர் புரம்பெயர் நாடுகளிலிருந்தும் போரட்டத்திற்காக வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறுகின்ற சந்தர்பத்தில் உலகத் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் போராட்டங்களில் வலி வடக்குப் போராட்டமும் ஒன்று.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நில அபகரிப்புக்கு எதிராகவும் இயல்புநிலை வேண்டியும் வலிகாமம் வடக்கு மக்களின் நிலமீட்புப் போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த போராட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் முகாம்களிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சரவணபவன் ஆகியோருடன், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஜங்கரநேசன், உறுப்பினர்கள் சித்தார்த்தன், அனந்தி,சிவாஜிலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே வடக்கிற்கு சென்றிருக்கும்; ஊடகவியலாளர்கள் பலரும் செய்தியினை அறிக்கையிட அங்கு திரண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கில் படைப்புலனாய்வாளர்களும் திரண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக