20 நவம்பர் 2013

யாழில் மகிந்தவிற்கு தீ வைப்பு!

யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் பாடசாலைக்கருகாக நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக ஆளும் தரப்பினர் பரவலாக ஜனாதிபதி மஹிந்தவின் தனியான உருவப் படங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி இணைந்திருக்கும் உருவப்படங்களை நிறுவி வைத்திருந்தது.
வடக்கின் அபிவிருத்தி வெறுமனே விளம்பரப் பலகைகளில் இருப்பதாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக் காலமாக இத்தகைய விளம்பரப்
பலகைகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டும் கிழிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னதாக இத்தகைய போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறானதொரு சூழலில் தற்போது யாழ். ஆயர் இல்லம் மற்றும் புனித பத்திரிசிரியார் பாடசாலை என்பவை அமைந்துள்ள சூழலில் நிறுவப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் படைத்தரப்பிடையே கோபத்தை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே வலிகாமத்தின் ஆனைக்கோட்டைப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சூத்திரதாரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இத்தீவைப்பு இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக