24 நவம்பர் 2013

ரொமேனிய மாணவர்களை அழவைத்த ஈழத்தின் இனக்கொலை!

சிறிலங்காவின் சமகால ராஜதந்திர நடவடிக்கையில் சவால்மிக்க நபராக, சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படத் தயாரிப்பாளர் கெலும் மெக்ரே மாறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை தொடர்ந்தும் அம்பலப்படுத்தும் முயற்சியில் மெக்ரே தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், லண்டனில் இருந்து ரொமேனியா நாட்டுக்குச் சென்ற மெக்ரே, அங்கும் 'நோ பயஃர் சூன்" என்ற சிறிலங்காவின் போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.நாவின் அனுசரனையோடு நேற்று முன்தினம் சுமார் 200 பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன் நிலையில் 'நோ பயஃர் சூன்" ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார்.
ரொமேனியா நாட்டின் தலைநகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தைப் பார்த்த பல மாணவர்கள் அழுதுள்ளதாகவும், அவர்கள் சிறிலங்காவில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கு பேசிய கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு ஆவணப்படத்தை இங்கு காண்பிக்க மிகவும் உதவியதாக தெரிவித்துள்ள கெலும் மெக்ரே, ரொமேனிய நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தான் இந்த ஆவணப்படத்தை போட்டு காட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரொமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, சிறிலங்கா பற்றிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தவே அவர் தற்போது அந்த நாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக