13 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்பு!ஜெயலலிதாவுக்கு மன்னிப்பே கிடையாது!

131106120743_mullivaikal_111_976x549_bbc_nocredit(2)முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வைகோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார் வைகோ. முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன். சமீபகாலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வைகோ பேசுவது இதுவே முதல் முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக