05 நவம்பர் 2013

ஆதாரங்களை வெளியிடுவதால் மக்ரேயை வெறுக்கிறது இந்தியா!

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரே இந்தியா செல்ல விசா மறுக்கப்பட்டுள்ளது. புது டில்லியில் நவம்பர் 7ம் திகதி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ம் திகதி இந்தியா செல்ல கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநருக்கு விசா மறுக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா உயிருடன் மீட்டு இலங்கை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சியை சனல் 4 தொலைக்காட்சி இறுதியாக வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இக்காணொளி சர்வதேச அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக