17 மே 2012

மே 18 மாலை 6.10மணிக்கு சுடரேற்றுங்கள்!-யாழில் “மே 18 இயக்கம்”!


May copyபோரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து மே 18 என்ற இயக்கம் என்ற பெயரிலான அமைப்பு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றது.
அந்த அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கான அறிமுக மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் மே-18ஆம் நாள் முள்ளிவாய்க்காலில், அதற்கு முன்னதான பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் காவெடுப்புகளுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்கான ஆற்றுப்படுத்தல்களையோ ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளையோ முன்னெடுக்க முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் கடந்த மூன்றாண்டுகளாகத் தவித்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகளால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இராணுவத்தின் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து ’18 மே இயக்கம்’ ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
போரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
என்று தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,
18 மே – கரிநாள்
தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  வன்துயரங்கள் ஊடாகப்  பயணித்த காலம்  மூன்றாண்டுகளைக் கடக்கின்றது. முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாகிப் போனவைகளுக்கு  எந்தப் பெறுமதியையும் தராத உலகம் நம்மை  வெறுங்கையோடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றது.
இந்த அலைந்துழல்வு வாழ்க்கைப் பாகத்தில் நம்மிடம்  எஞ்சியிருப்பதெல்லாம் எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான்.   முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய்   இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம்  இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம்.  இழந்தவைகளும் அதன் துயரவலிகளும் அந்த நினைவுகளால்  ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.
ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 40000 தமிழ் உயிர்களைத் தின்றது. இந்தக் கணிப்பு ஐ.நாவினுடையது. களத்தில் நின்ற தமிழர்களுக்குத் தெரியும் இன்னும் எத்தனை ஆயிரம் கொலைகள் சமநேரத்தில் நிகழ்ந்தனவென்று. தாயின் கருவில் இருந்த  சிசு தொடக்கம், நாளை கட்டையேறத் தயாராயிருந்த மூத்தோர் வரைக்கும் கண்மூடித்தனமாகக்  கொன்றொழித்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுகையில், நாம் ஒன்றுகூடி ஒரு துளிக் கண்ணீரைக் காணிக்கையாக்கும் வழி வகையின்றி நிற்கிறோம். இந்தக் காயங்களை    சொற்களுக்குள்அடக்கி விடமுடியாது.  நம் அவலத்திற்கு மொழியில்லை. அதனால்தான் அது இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது.
இந்த  நாள்களில், நம்மிடம்  இருக்கும் துயர்  வலிமைபெறவேண்டும்.  முள்ளிவாய்க்கால் தந்த  துயர நினைவுகளை  நினந்துருகுதல்  அந்த வலிமையைத் தரும் கணங்களாக இருக்கும். மே 18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து மக்களின் மரணப் பெறுமதியையும் கனதியாக்கி, அன்றைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிப்போம். அதற்காக உங்கள் வீடுகளில்  மே 18 ஆம் திகதி மாலை 6.10 மணிக்கு சுடரேற்றுங்கள்.  அந்தக் குறுகிய  வன்முறை வெளியில் தம்மை  ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்காக ஒரு நிமிட   மௌன வணக்கத்தைச்   செலுத்துங்கள். இந்த நாள்களில்  மௌனித்த  ஆன்மாக்கள் மேன்மை பெறட்டும். நமக்கு வலிமை தரட்டும்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக