29 மே 2012

பதவி போனபின் தமராவிற்கு பிறந்த ஞானம்!

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் தொடர்ந்து பணியாற்ற தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன் பிறேசில் அல்லது கியூபாவுக்கான தூதுவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து தடம்புரள்வதாகவும் தாமரா குணநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அணிசேரும் கொள்கைக்கு மாறத் தொடங்கியுள்ளதாகவும், இது சோசலிச அணிக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தை ஊடகங்களுக்கு தான் கசிய விடவில்லை என்றும் கூறியுள்ள அவர், எந்தவொரு இராஜதந்திர பதவிக்கும் அரசியல் ரீதியாக நியமனம் பெற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக