வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
அமைந்திருந்த காணியினை 611 ஆவது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு
எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாலசுந்தரன், காணி உத்தியோகத்தர் வசந்தன்
ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும்
தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து ஐநூற்றுக்கும்
மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள ஈச்சங்குளம் மாவீரர்
துயிலும் இல்லக்காணியில் உள்ள மாவீர்களின் நினைவுத்தூபிகள், கல்லறைகள் என்பன
இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு இடிபாடுகள் காணியின் எல்லைப்பகுதிகளின்
அரண்களாக குவிக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லக்காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துவருவதற்கு மக்கள் கடும்
எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் காணியினை தமக்கு உரித்தானதாக்க இராணுவத்தினர்
முடிவுசெய்திருந்த நிலையில் வவுனியா பிரதேச செயலர் அ.சிவபாலசுந்தரனும், காணி
உத்தியோகத்தர் வசந்தனும் தாமாகவே முன்வந்து குறித்த காணியினை இராணுவத்தினருக்குச்
சொந்தமானது என்று காணி உரிமைப்பத்திரம் வழங்கியிருக்கின்றனர்.இந்தக் காணி தனியாருக்குச் சொந்தமான காணியாக இருந்தும், உரியவருக்கு இந்தக் காணியை வழங்காமல் பிரதேச செயலாளரும், காணி உத்தியோகத்தரும் படைத்தரப்பினருக்கு உரிய நடைமுறைகளுக்கு மாறாக, அத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் எதேச்சதிகாரமாக வழங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரியாகிய இந்த பிரதேச செயலர் தான் ஓர் அரசாங்க சார்பு அரசியல்வாதியைப் போலவே நடந்து கொள்கின்றார் என்றும், பொது மக்கள் மற்றும் தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்கின்றார் என்றும் பொது மக்கள் இவர் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். இவரது முறையற்ற நடவடிக்கைகள், செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை அடையாளப்படுத்தி வைத்து, அமைச்சர் ஒருவரின் அரசியல் பலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் இவர் பழிவாங்கி வருவதனால், தங்களால் இவருக்கு எதிரான முறைப்பாடுகளை நேரடியாகச் செய்ய முடியாதிருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விபரம் கேட்பவர்களிடம் மீடியாவில் செய்தி போடவா கேள்வி கேட்கின்றாய், மீடியா இல்லை எந்த வெங்காயத்திலும் எழுது. எனக்குப் பயமில்லை. ஆனால் நீ கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது நான் சொல்வதைக் கேட்டு அதன்படி செய்தால் உனக்கு நல்லது. தேவையற்ற கேள்விகளைக் கேட்காதே என்று அச்சுறுத்துவதும் இவரது வழக்கமாக இருக்கின்றது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த காணியில் 611 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் திறப்பு நிகழ்வின் போது உரையாற்றிய படைத்துறையின் அதிகாரி குறித்த நபர்களின் பணியினை மனந்திறந்து பாராட்டியதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு, கருங்கல் உடைத்தல், மரக்கடத்தல், காணி அபகரிப்பு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பிரதேச செயலரும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பல அந்நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக