05 மே 2012

மூத்த பெண் போராளி தற்கொலை!


வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த  நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள  மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் அண்மைக்காலமாக மன உளைச்;சல்கள் காரணமாக சாவைத் தழுவிக் கொள்ளும் பரிதாபகரான நிலை தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக