25 மே 2012

சிறிலங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அமெரிக்காவின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.200பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 44 பக்கங்களில் விபரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் மைக்கல் போஸ்னரும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபரும், பாராளுமன்றமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் அதிபரின் குடும்பமே ஆட்சியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இரண்டு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சு என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர்.
மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார். அதிபரின் மகன் உட்பட அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர். அதிபர் மற்றும் நாடாளுமன்றத தேர்தல் இரண்டுமே தேர்தல் சட்டங்களை மீறிய மோசடியாகவே இடம்பெற்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளினதும் அரச ஆதரவுக் குழுக்களும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும், கடத்தல், கப்பம் கோரும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு மனித உரிமை மீறல் பிரச்சினைகள் பெருமளவில் காணப்படுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற குழுகள் பொதுமக்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் ஆகியோரை துன்புறுத்தி வருகின்றனர். ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே செயற்படுகின்றனர். இலங்கையில் காணாமல் போனோல் பிரச்சினை முன்னைய ஆண்டுகளை போலவே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அதற்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருப்போரை சித்திரவதை செய்கின்றனர். பொதுமக்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுபவர்களில் சிலர் விசாரணையின் போது மரணமாகியுள்ளனர்.நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். கருத்து வெளியிடுதல், ஊடக சுதந்திரம், ஒன்றிணையும் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள், படையினரின் சித்திரவதைகள், ஊழல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அதிகாரபூர்வமாக தண்டிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக