மேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம்
செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி
ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும்
என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று
தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை
எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக
கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்
மாவை சேனாதிராசாவும், இரா.சம்பந்தனும் உரையாற்றியிருந்தனர். அதேசமயம் இந்தக்
கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மிகவும் முயற்சிகள் எடுத்திருந்த மனோ
கணேசன் இந்தக் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், விஜயகலா மகேஸ்வரன்,
யோகராஜன் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் சிறிதரன் எம்.பி
கூறினார்.
இது ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்று ரீதியான
துரோகத்தின் ஒரு கட்டமாகவே பார்க்க முடிகிறது என்றும் – நாங்கள் நல்ல பாடங்களை
மேதினத்தில் கற்றிருக்கிறோம் என்றும் சிறிதரன் கூறினார். இந்த மேதினக் கூட்டத்தை
விஜயகலாவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பொறுப்பாளர்களுமே ஒழுங்கு செய்ததாக
ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு குறிப்பிட்டதாகவும் அவர் கூட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக