30 மே 2012

யுத்தக்கருவியாக வல்லுறவு,விசாரிக்க பிரித்தானியா தயாராகிறது!

உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது.
இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை அமைப்பதாக த கார்டியன் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டத்தரணிகளை கொண்டதாக இக்குழு அமைந்துள்ளது. இந்த வருட இறுதியில் இக்குழுவானது நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிகுறிகள் தென்பட்டால் குறுகிய கால முன்னறிவித்தலுடன் போர் வலயத்துக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இந்த விசேட குழு இருக்கும்.
இக்குழுவினர் முதலாவதாக செல்லும் இடமாக சிரியா இருக்குமென கூறப்படுகிறது. சிரியாவில் வல்லுறவுகள் இடம்பெற தொடங்கியிருப்பதாக திகிலான அறிக்கைகள் கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிகார அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.
தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் மோசமான பாலியல் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல்போகும் பொதுவான தன்மை காணப்படுகிறது என்று ஹேக் கூறியுள்ளார். இந்தக் குழுவுக்கு அவசர நடவடிக்கைக்கான நிதியாக 20 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பொஸ்னியா யுத்தத்தின் போது இடம்பெற்ற வல்லுறவினால் பாதிக்கப்பட்டோரின் முகாம்கள் பற்றிய அஞ்சலினா ஜொலியின் திரைப்படமான இரத்தமும் தேனும் நிறைந்த மண், விசேட செயலணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது நேற்று காண்பிக்கப்படவிருந்தது.
பொஸ்னிய யுத்தத்தின்போது 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் வல்லுறவு போர் குற்றங்களுக்காக 30 விசாரணைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது.
ருவாண்டா இனப்படுகொலையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சியாராலியோனில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை லைபீரியாவிலுள்ள பெண்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் படைவீரர் அல்லது துணைப் படைக்குழுவைச் சேர்ந்தவர்களினால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு இலக்காகியிருந்தனர்.
இரு வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியை ஐ.நா. நியமித்திருந்தது. இந்த விவகாரங்களுக்கான ஐ.நா. விசேட பிரதிநிதியான வோல்ஸ்ராம் கடந்த பெப்ரவரியில் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்த தனது அறிக்கையில் மோசமான குற்றங்களை இழைத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானின் இராணுவம், ஜவரிகோஸ்ட்டிலுள்ள போராளிகள், கொங்கோ ஆயுதப்படைகள் என்பவற்றின் பெயர்களை வால்ஸ்ராம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை யுத்தத்துக்குப் பின்னரான வலயங்களில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை பாலியல் வன்முறைகள் எவ்வாறு புறந்தள்ளி வைத்தன என்பதற்கும் வோல்ஸ்ராம் உதாரணங்களை முன்வைத்திருந்தார் சாட், நேபாளம், சிறிலங்கா, கிழக்கு தீமோர், செஸ்னியா போன்ற நாடுகளை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகையில் இலங்கை நிலைமைகள் தொடர்பாகவம் பிரித்தானியா ஆராயலாம் என்பதால் கொழும்பு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக