சர்வதேச உதவிகள் மூலம் பொருளாதார அபிவிருத்தி குறித்து அக்கறை காட்டி வரும்
இலங்கை, அதேஅக்கறையோடு போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த அரசியல்
பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா
குறிப்பிட்டுள்ளது..
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பான செயல்திட்டங்கள் பற்றி வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கேள்வி
எழுப்பவுள்ளார்..
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள அமைச்சர் பீரிஸ் இவற்றுக்குப்
பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்தரங்கில் பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர்
கலாநிதி போல் காட்டர் இதனை தெரிவித்தார்..
அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்: தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசி
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட
வாய்ப்பாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை
நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும் கால அவகாசம்
போதாது என இலங்கை அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தமிழ் மக்களுடைய அரசியல்
உரிமைகள் தேவைகள் நிவர்த்தி செய்யத் தவறியமையே இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு
வழிவகுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது...
ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் ஏற்படுவதாக
அமையும். எனினும் இந்த அறிக்கையில் பொறுப்புக் கூறல், சர்வதேச மனித உரிமை மீறல்
தொடர்பான விசாரணை தொடர்பாக போதியளவாக இல்லை என்பது எமது கருத்தாக உள்ளது.
ஆணைக்குழுவின் சிபார்சுகளை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த தவறியதன் காரணமாகத்
தான் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானத்தை
நிறைவேற்றின. இந்த விடயம் தொடர்பாக சில ஊடகங்களும் சிலரும் உண்மைக்கு புறம்பான
செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இந்தப் பிரேரணையில் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. அதில் ஒன்று
ஆணைக்குழுவின் சிபார்சுக்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தல், இரண்டாவது,
விசாரணைகள் மேற்கொள்ளும் செயல்திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும்,
மூன்றாவது, ஐக்கிய நாடுகள் நவநீதம்பிள்ளை இலங்கை அரசுடன் கலந்துரையாடி தொழில்
நுட்ப உதவிகளை வழங்குதல் என்பனவாகும்.
இந்த விடயங்கள் தொடர்பாக 2013 இல் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில்
அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை தடைப்பட்டதற்கு நாம்
வருந்துகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில்
பங்குபற்ற முடியும் என்று கூறியுள்ளது, இதனை நாம் வரவேற்கிறோம். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் பேசித் தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே
அமெரிக்காவின் நிலைப்பாடாகும். அரசியல் தீர்வைப் பெற எமது உதவிகளை வழங்குவோம்.
என்றும் அவர் குறிப்பிட்டார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக