11 மே 2012

மன்னார் ஆயர் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் விசாரணை!?


மன்னார் ஆயர் இராயப்பு ஜேசெப் மீது இலங்கை அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். போரின் இறுதிக்காலப் பகுதியில் 1,46,679 பேர் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அவர் சாட்சியமித்தமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல்போன 146,679 பேர் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என தன்னுடைய சாட்சியத்தின் போது மன்னார் ஆயர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய குற்றப் புலனாய்வுத் திணைக்க அதிகாரிகளிடம், நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தான் சமர்ப்பித்த எந்த அறிக்கையை வேண்டுமானாலும் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக ஆயர் தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆயர் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கின்றாரா என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த ஆயர், மதகுரு ஒருவர் கூட காணாமல் போயிருப்பதாகவும், ஆனால், காணாமல்போன அவருடய நிலை தொடர்பாகவுமே தான் அக்கறைப்படுவதாக ஆயர் பதிலளித்தார்.
போர்க் காலத்திலும், அதன் பின்னருமான வன்னிப் பகுதியின் சனத் தொகை விபரங்களைத் தருமாறு சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டபோது அதற்குப் பதிலளித்த ஆயர், இந்த விபரங்களை ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிராந்தியச் செயலகங்கள் மற்றும் கிராமசேவகர்களிடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார். 146,679 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்ற தகவலைக்கூட அரசாங்க ஆவணங்களில் காணப்படும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டே தான் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயருடைய வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், இறுதியில் அதனை அவருக்கு வாசித்துக் காட்டி அவரது கையொப்பத்தையும் அதில் பெற்றுச் சென்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுத் திணைக்க அதிகாரிகள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விசாரணை இடம்பெற்ற போது ஆயருடன் மேலும் பல கத்தோலிக்க மதகுருக்களும் காணப்பட்டனர். ஆயருடன் காணப்பட்ட ஏனைய மதகுருக்களின் பெயர் விபரங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பெறப்பட்டது. ஆயரை இரண்டு அதிகாரிகளே விசாரணைக்கு உள்ளாக்கியதாகவும் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தமது விசாரணைகளை தமிழ் மொழியிலேயே மேற்கொண்டார்கள்.
மன்னார் ஆயர் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அளித்த சாட்சியம் குறிப்பாக 1,46,679 பேர் காணமல் போயிருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரிலும் முக்கியமாகப் பேசப்பட்டது. தற்போதும் சர்வதேச சமூகம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றது.
இவ்வாறு சர்வதேச ரீதியாக நெருக்கடி நிலை ஒன்று உருவாகியிருக்கும் பின்னணியிலேயே ஆயர் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரது சாட்சியமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக