08 மே 2012

போராட்டம்தான் தீர்வைதரும் என்றால் அதற்கும் தயார்!


தமிழர் தாயக பூமியில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை வெடிக்கச் செய்யும் நிர்ப்பந்தத்துக்குள் தாம் தள்ளப்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டப் பேச்சுகளில் நம்பிக்கையானதொரு சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசு தவறியுள்ளதால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தைக் கையாளவேண்டிய அணுகுமுறை குறித்து அவசரமாகக் கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு தமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி தமிழர்களுக்குத் தீர்வை வழங்கவேண்டிய இத்தறுவாயில், இலங்கை அரசு தமிழர்களைக் கொடுமைப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் மற்றும் வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்கள் ஆகியவை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியவை வருமாறு:
"இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுகளை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான சாதகமானதொரு சூழலை அது இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கூட்டமைப்பு இதுவரையில் அரசுடன் முன்னெடுத்து வந்த பேச்சுகளில் அரசு நம்பிக்கையாக நடந்துகொள்ளவில்லை. எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரினோம். காணாமல் போனோர் குறித்தான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என அரச தரப்பிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துமாறும் வலியுறுத்தினோம். ஆனால், இவை எதனையும் இலங்கை அரசு செய்து முடிக்கவில்லை. தொடர்ந்தும் அசட்டைப் போக்கிலேயே செயற்படுகின்றது. நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னும் முன்வரவில்லை." எனக் கூறிய அவா் தொடர்ந்து,
"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரினோம். ஆனால், அந்த விடயத்தில் இலங்கை அரசு இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களின் குறைந்தபட்ச தேவைகளையாவது நிறைவேற்றவேண்டிய தறுவாயில் தமிழர்களை அந்நியர்களாகக் கருதி இலங்கை அரசு கொடுமைப்படுத்துகின்றது. நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் எனத் தமிழர் விரோதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான எண்ணம் அரசிடம் இல்லை என்பதை அதன் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறானதொரு நிலையில், நாம் எப்படித் தெரிவுக்குழு குறித்து சிந்திப்பது? பேச்சுகளில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தத் தவறிய மஹிந்த அரசை எந்த அடிப்படையில் நாம் நம்புவது?"
"நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் குறித்து என்னால் தனித்து பகிரங்கமாகக் கருத்து வெளியிட முடியாது. சக உறுப்பினர்களுடன் கூடி ஆராய்ந்த பின்னரே இது விடயம் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியும். எது எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது. ஆனாலும் தெரிவுக்குழு விடயத்தில் எமது நிலைப்பாடு இன்னும் உறுதியாகவே உள்ளது. வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலும் திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குடிசன பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே இலங்கை அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது.குடியேற்றத்துக்கும், குடிப்பரம்பல் விகிதாசாரத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு மாற்றியமைப்பதற்குமிடையில் வித்தியாசம் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்."
தொழில் நிமித்தம் வடக்குக்கு வரும் சிங்கள மக்கள் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவை எந்த அடிப்படையில் நியாயம்? நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உட்பட முக்கிய சில காரணங்களுக்குத் தீர்வை வலியுறுத்தி இதற்கு முன்னர் நாம் வவுனியாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆனால், எமது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இன்னும் மந்தப் போக்கிலேயே செயற்படுகின்றது. தமிழர் தாயகப் பூமியில் அரங்கேற்றப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் நாம் தள்ளப்படுவோம்.
போராட்டங்கள்தான் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித்தரும் என மஹிந்த அரசு நிர்ப்பந்திக்குமானால் அதனைச் செய்வதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து பலமுறை நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவுடனும் பேசியுள்ளோம். எனவே, இந்தப் பிரச்சினை குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக