17 மே 2012

அனோமா பொன்சேகாவை தேடிச்சென்று சந்தித்தார் மகிந்த!


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.
“சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக