07 மே 2012

போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!-ஐரோப்பிய ஒன்றியம்


சிறிலங்காவில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நேர்மையான நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியாவுக்கான குழுவின் தலைவியான ஜீன் லம்பேர்ட், சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு.
பல நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களும் ஏனைய அரசியல் கைதிகளும் சிறிலங்காவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ள போதும் நீதியின் முன் நிறுத்தப்படவோ குற்றச்சாட்டு முன்வைக்கப்படவோ இல்லை என்று தமிழ் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
சரத் பொன்சேகா விவகாரத்தில் கூட, அவருக்கு உண்மையான நீதி வழங்கப்பட வேண்டும் என்றே ஐரோப்பிய நாடாளுமன்றம் கருதுகிறது.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலும் குடியிருப்புகளிலும் வசிப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை கொண்டுள்ளது“ எனறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக